இது ஒரு சொந்த கற்பனையே.
இதில் வரும் கதா பாத்திரங்களெல்லாம் கற்பனையே.
1
இடம்: ஒரு உணவகம்.
நிகழ்வு: ப். கிருஷ்ணன், வாரா. கிருஷ்ணனை சந்தித்தல். வாரா. கிருஷ்ணன் போண்டா தின்று கொண்டிருந்தான். அப்போது
அங்கே வந்தான் நம்ம ப்ரியமான கிருஷ்ணன். அவன் வாரா. கிருஷ்ணனின் எதிரில் அமர்ந்து கொண்டு
தனக்கு இரண்டு ப்ளேட் இட்லி ஆர்டர் கொடுத்தான்.
ப்.கிருஷ்ணன் : ‘ஹே!
நீங்கள் கிருஷ்ணன் தானே?’ என்று தயக்கத்துடன்
வினவினான்.
வாரா.
கிருஷ்ணன் : ’ஆமாம். உங்களுக்கு எப்படித் தெரிந்தது, நான் தான் வாரா. கிருஷ்ணனென்று?
உங்களை எனக்கு அடையாளம் தெரியவில்லையே? நீங்கள் யார்? உங்கள் பெயரென்ன?’ என்று அவனும்
மிகவும் தயக்கத்துடன் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்டான்.
ப்.
கிருஷ்ணன் : ‘என் பள்ளி நாட்களில் எங்கள் வகுப்பில் ஒரு மாணாக்கன்
இருந்தான். அவன் ஒரே சமயத்தில் பத்து போண்டா கூட சாப்பிடுவான். அதனால்,
அவனை நாங்கள் ‘போண்டா கிருஷ்ணன்’ என்று அழைப்போம். இப்போது நீங்கள் மூன்று போண்டாக்களை ஆர்டர் செய்து
தின்று கொண்டிருக்கிறீர்கள். அதான், ஏதோ என்
உள் மனது கூறிற்று, நீங்கள் அந்த கிருஷ்ணனோவென்று.’
வாரா.கிருஷ்ணன்:
‘ஆமாம், ஆமாம், சரியாகச் சொன்னீர்கள். நான் அந்த கிருஷ்ணன் தான். ஆனால், இப்போது என் பெயர் வாரா.கிருஷ்ணன். நான் இந்த
சொசைடியில் ஒரு புகழ் பெற்ற புள்ளி கூட,’ என்று கூறி அசடு வழிந்து கெக் கெக்கே என்று
ஒரு சிரிப்பும் சிரித்தான்.
ப்.கிருஷ்ணன் : ‘எந்த சொசைடி? நானிருப்பது ஆனந்தா ஹௌசிங்க் சொசைடி.
நீங்கள் இருப்பது......?’ என்று புத்திசாலித்தனமாகக் கேட்டுவிட்டது போல் அவனைப் பார்த்தான்.
வாரா.கிருஷ்ணன்:
‘நோ, நோ, கிருஷ்ணன், நான் சொல்வது எந்த ஹெளசிங்க் சொசைடியுமில்லை. நான் அரசியலில் ஒரு
பெரிய புள்ளி. த.தோ. கட்சியில ஒரு முக்கிய பொறுப்பிலிருக்கிறேன்,’ என்பதைக் கூறினான்.
வாரா.கிருஷ்ணன் தொடர்ந்தான்: ‘இப்போ, நீங்கள்.......இட்லி இரண்டு ப்ளேட் ஆர்டர்
செய்துள்ளீர்கள். நீங்கள்......இட்லி கிருஷ்ணனா?’
என்று கூறி ஒரு ஷெர்லக் ஹோமின் துப்பறியும் பார்வையை செலுத்தினான்.
ப்.
கிருஷ்ணன் : ‘யா, சரியாகச் சொன்னீர்கள். நான் அந்த ‘இட்லி கிருஷ்ணன்’ தான். உங்களைப் போல், என் பேரும் மாறி விட்டது. இப்போது
நான் ‘ப்ரியமான கிருஷ்ணன்’. ஆமாம், உங்கள் கட்சி அந்த ததிகிண தோம் கட்சிதானே’, என்று விளக்கம் கொடுத்தான்.
‘ இந்த
சொத்த கட்சில இவனுக்கு ஒரு முக்கிய பதவியாம்; ஆச்சரியமொன்றுமில்ல,’ தனக்குள் அவ்வாறு நினைத்துக் கொண்டான்.
வாரா.கிருஷ்ணன்:
(மனதிற்குள் ‘இவனைப் பார்த்தாலே ஒரு சொத்தையென்று தெரிகிறது. நம் கட்சியைக் கிண்டல்
செய்கிறான். இவனுக்கு சரியான சமயத்தில் ஆப்பு வைக்க வேண்டியதுதான்’ என்று நினைத்துக்
கொண்டான்) ஆனால் ஒன்றும் கூறாது, தொடர்ந்தான்.
‘அடேடே, ஆச்சரியமாக உள்ளதே! கிருஷ்ணன்
மீட்டிங்க் கிருஷ்ணனா!, ஹா, ஹ, ஹா!’, என்று ஏதோ ஜோக் ஒன்றை அடித்ததுபோல் வாய் விட்டு
பெரிதாகச் சிரித்தான்.
ப்.
கிருஷ்ணன்: ‘அப்போ நான் உங்களை.... நீயென்று கூப்பிடலாமா?’ என்றான்.
வாரா.கிருஷ்ணன்:
‘அடேடே, அதில் என்ன. நானும் இனிமே, உங்களை
நீயென்று கூப்பிடுகிறேன். ஆனால், என் கட்சித் தொண்டர்கள் யாராவது அருகில் இருந்தால்,
அப்போது மட்டும் மரியாதையுடன் கூப்பிடு, ஏனென்றால், அவர்கள் என்னை தொடர்ந்து மதிக்க
வேண்டுமில்ல,’ என்று ஒரு வடிவேலு ஸ்டைலில் கூறினான்.
ப்.கிருஷ்ணன்:
‘ஆமாம், உனக்கு எப்படி வாரா. கிருஷ்ணன் என்று பெயர் வந்தது. உன் அப்பா பெயர் தண்டம்.....ஏதோயில்ல,’ என்று கிண்டல்
செய்வதுபோல் கேட்டான்.
வாரா.கிருஷ்ணன்:
‘பரவாயில்லை. நீ எங்கப்பாவை தண்டம் என்று சொன்னதில் ஒரு வருத்தமுமில்லை. அவர்.....இல்லெல்ல...அவனொரு
தண்டம் தான். அந்த காலத்தில் எப்பப் பார்த்தாலும்
என்னை படி படியென்று புடுங்குவான். அவன் அப்பனா?
அதனால்தான் என் பெயரிலிருந்தும் அவன் பேரை எடுத்துட்டேன். அதற்கு பதிலாக என் மனைவி
வாராணியின் பெயரை வெச்சிண்டுட்டேன். அவளும் ஒரு தண்டம் தான். ஒரு எழவும் தெரியாது.
ஆனால், என் அப்பா தண்டத்தைவிட என் மனைவி தண்டம் பெட்டர். இதில் ஒரு அரசியல் நோக்கமும்
உள்ளது. அவள் பெயரை என் பெயருக்கு முன் வைத்து என் கட்சிக்காரர்களுக்கு நான் பெண்களை
மதிப்பவன் என்று வெளிப்படுத்திவிட்டேன். இது எப்படி?’ என்று ஒரு சிறிய சொற்பொழிவு கொடுத்தான்.
ப்.கிருஷ்ணன்:
ஏதோ தான் ஒரு சாணக்கியன் என்று அவனுக்கு நினைப்பு, என்று தன் நண்பனைப் பற்றி தனக்குள்
ஒரு ஏளனமாக எண்ணி அவனைப் பார்த்தான். ஆனா, இந்த அசடு எப்படி அரசியலில் நுழைந்தான் என்றும்
வியந்தான். எப்படியோ, நமக்கு தேவைப் பட்டால் இவனை உபயோகிச்சிக்கலாமென்றும் தனக்குள் அசை போட்டான்.
அவன் தொடர்ந்தான்.
‘குட்,
குட்.... நீ மிக புத்திசாலியென்று இப்போதுதான் தெரிகிறது. அப்போ, ஸ்கூல்ல படிச்ச காலத்திலே,
நீ க்ளாஸை கட் செய்துவிட்டும், ஏதோ ஒரு மரத்தடியில் தூங்கிவிட்டும், மற்ற மாணவர்களுடன்
சண்டையிட்டுக் கொண்டும் இருந்தாய். அடடா, என்ன மாற்றம், உன்னிடம்.’ அவனுக்கு ஐஸ் வைத்து பேசினான்.
வாரா.கிருஷ்ணன்:
(ப். கிருஷ்ணன் சொல்வதை ஆமோதிப்பது போல் தலையை ஆட்டிக் கொண்டே) ‘ஆமா, உன் அப்பாவின்
பேரும் ஒரு ஜடம்......ஆங்க், ஞாபகம் வந்து விட்டது.....ஜடாதரன்தானே. பின் ஏன் உன் பெயரையும்
பிரியமான கிருஷ்ணனென்று வைத்துக் கொண்டுள்ளாய்?’
ப்.கிருஷ்ணன்:
‘ஹா, ஹாஹ் ஹா! சரியாகச் சொன்னாய். என் அப்பாவும் ஒரு ஜடம்தான்.
வாரா.கிருஷ்ணன்
நினைத்துக்கொண்டான்..... ‘நீயும் ஒரு ஜடம். உங்க அப்பாவும் ஒரு ஜடமென்று எல்லோருக்கும்
தெரியும். இதில் என்ன ஆச்சரியமிருக்கிறது?’
வாரா.கிருஷ்ணன்
தொடர்ந்தான். .... ‘அது சரி, நீ ஏன் உன் பெயரிலிருந்து உன் அப்பாவின் பெயரை எடுத்து
விட்டாய்?’
ப்.கிருஷ்ணன்: ‘உன்னைப் போல் நானும் புத்திசாலித்தனமாக ஒரு காரியம்
செய்தேன். அப்பாவோ ஒரு ஜடம். எனக்கு மனைவியாக வாச்சதும் ஒரு ஜடம்தான். அவள் ஒரு குதிர் போல் இருப்பாள். அவள் ஒரு மிகப்
பணக்காரரின் பெண்ணாக இருந்தாலும் ஒருவரும்
அவளை கட்டிக் கொள்ள முன் வரவில்லை. எனக்கு
படிப்பு குறைவுதான். ஆனால், நான் கொஞ்சம் அதிக அழகாகவே இருந்தேன்; அந்த காலத்தில், வைரத்தோடு, வைர நெக்லஸ் என்று நகைகள்
போட்டு அவளை எனக்கு கல்யாணம் செய்து வைக்கிறேனென்றார் அந்த மரக்காலின் அப்பா. நானும் அந்த வைரத்தோட்டிற்கும், நெக்லஸிற்கும் நல்ல
மதிப்பு இருக்குமென்று கருதி அந்த குண்டைக் கல்யாணம் செய்து கொள்ள சரியென்று சொல்லி
விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளேன். மேலும், என் மாமனாரை குஷிப் படுத்தவும் அவர் சொத்தைக் கறக்கவும்
என் பெயரோடு அவளின் ‘ப்ரியம்வதா’ என்ற பேரை சுருக்கி, ப்ரியமான கிருஷ்ணனென்றும் வைத்துக்
கொண்டேன்’, என்று தன் பெருமையை விளக்கிக் கூறினான். இப்போ என் மாமனார் என் கைக்குள்,
தெரியுமா!’
வாரா.கிருஷ்ணன்:
(அடாடா....அசடோட இன்னொரு அசடு சேர்ந்து, அசடு ஸ்கொயர் ஆனது. இதில் இவனுக்குப் பெருமை
வேறு, என்று தனக்குள் எண்ணி, இவன் ஒரு ‘கேஷ் கவ்’; இவனிடம் சரியாகக் கறந்துவிட வேண்டியதுதான்
என்று மேலும் எண்ணி, அவனை தன் மனதுக்குள் எடை போட்டான்)
ப்.கிருஷ்ணன்:
‘கிருஷ்ணா, நீயோ அரசியலில் ஒரு பெரிய புள்ளி.
நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமே?’
என்று தயங்கினான்.
வாரா.கிருஷ்ணன்:
‘உதவியா? நான் என்ன உதவி செய்ய வேண்டும், சொல்லு?’ என்று கேட்டான்.
ப்.
கிருஷ்ணன் : எனக்கு எப்ப பார்த்தாலும், நல்லவனாகவே இருக்க வேண்டியுள்ளது.
அப்பதான் என் மாமனாருக்கு என்னைப் பற்றி நல்ல அபிப்ராயமும் இருக்கும். எனக்கு, நான்கு
பிள்ளைகள். ஒரு பயகூட பிரயோசனமில்லை.
(வாரா.கிருஷ்ணன்
நினைத்துக் கொண்டான். நீயே ஒரு உதவாக்கரை. உன் பிள்ளைகள் உன்னைப் போல்தானே இருப்பார்கள். ஏதோ மாமனாரைக் கறந்து கறந்து சுகமாக இருக்கிறாய்).
ப்.கிருஷ்ணன் தொடர்ந்தான்: ‘மூத்தவன்
தன் தம்பியுடன் சேர்ந்து, என் கையெழுத்தை ஃபோர்ஜ் செய்து என் பாங்க் கணக்கிலிருந்து
கிட்டத்தட்ட ஐந்து கோடி ரூபாயைத் திருடி விட்டான். என்னடா
என்று கேட்டால், அந்த பணத்தை தன் மாமனாருக்கு ஏதோ பணத் தேவையென்று கொடுக்க எடுத்தேனென்கிறான்.
அப்படி எடுத்த பணத்தை சாமர்த்தியமாகக் கூட
வைத்துக் கொள்ள யோக்கிதையில்லை. யாரோ, ஸேமதுரையானாம்.
அவன் ஒரு சொத்த ரவுடி; அவன் கூட்டாளி ஒரு மாஜி போலீஸ் அதிகாரி கிரிதரனாம். அவனும் ஒரு
கிறுக்கன். ஆனால், என் மகன் அவர்கள் சூழ்ச்சியில் மாட்டிக்கொண்டு
அவ்வளவு பணத்தையும் பறிகொடுத்து விட்டான். இப்போது, அதைத் தேடிக் கொண்டிருக்கிறோம்.
அவ்விருவர்களும் தலை மறைவாகி விட்டார்கள்.
போலீஸில் எங்கள் குடும்ப நண்பன் ராட்டினம்
என்று ஒருவன் இருக்கிறான். இதுவரை ஒரு கேஸில்கூட ஒழுங்கா துப்பு துலக்கவில்லை.
இருந்தாலும், எங்கள் ஜோஸியர் கூறியபடி அவனையே
எனக்கு உதவுமாறு கேட்டுள்ளேன்.’
‘அரசாங்கம் வேறு டிசம்பர் 30 தேதிக்குள், பழைய
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களையெல்லாம் வங்கியில் செலுத்தவில்லையென்றால், அவைகள்
செல்லாதென்று அறிவித்துள்ளது. இப்போ, நீதான்
எனக்கு உதவி செய்ய வேண்டும்,’ தன் மனதைத் திறந்து
ஒரு ஒப்பாரி வைத்தான் (அதைத் தவிர, அவனுக்கு பேசவும் வராது. பேசினால், ஒப்பாரியும்,
அழுகையும்தான்; இல்லையென்றால், கடவுள் காப்பாற்றுவாரென்று திருதிருவென்று முழிப்பான்).
வாரா.கிருஷ்ணன்: (தன் மனதுக்குள் அசை
போட்டான். இந்த முட்டாளுக்கு உதவுவதுபோல் நடித்து, இந்த டீல்ல ஒரு 20-30 பெர்ஸென்டாவது
நாம் அடித்துவிட வேண்டும்) அவன் கூறினான். ‘இது சற்று கஷ்டமான காரியம் போலுள்ளது. இதற்கு
செலவு செய்ய வேண்டியிருக்குமே, கிருஷ்ணா!’ என்று கூறி அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்தான்.
ப்.கிருஷ்ணன்: ‘பரவாயில்லை. நான் என்
மாமனாரிடம் ஒரு பொய்யை எப்போதும் போலச் சொல்லி கொஞ்சம் பணம் வாங்கி விடுகிறேன். நீதான்,
எப்படியாவது எனக்கு அந்த தொலைந்த பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும்.’
வாரா. கிருஷ்ணன்: ‘அப்படியானால், கவலைப்
படாதே. எனக்கு பெரிய பெரிய ரவுடிகளைத் தெரியும். அவர்களுக்கு இந்த பசங்களெல்லாம் ஒரு
கொசு மாதிரி. அவர்கள் மூலமாக இந்த பயல்களைக்
கண்டு பிடித்து உன் பணத்தை பெற்றுத் தருகிறேன்.’
சர்வர், வாரா. கிருஷ்ணனிடம் அவன் சாப்பிட்டதற்கான பில்லைக்
கொடுத்து சற்று காத்திருந்தான்.
வாரா.கிருஷ்ணன்
அதை மேலெழுந்தவாரியாகப் பார்த்தான். பின் தன் கடைக் கண்ணால், நண்பன் கிருஷ்ணனைப் பார்த்தான்.
அவன்
நண்பன் கிருஷ்ணனும் தனக்கு இந்த வாரா. கிருஷ்ணனால் ஒரு பெரிய காரியம் ஆகப் போவதை மனதில்
கொண்டு, ‘இங்கே, கொடப்பா. நான் இந்த பில்லுக்கும் சேர்த்து பணம் கொடுத்து விடுகிறேனென்றான்.
வாரா.கிருஷ்ணன்:
‘தாங்க்ஸ், கிருஷ்ணா; அப்ப நான் செல்கிறேன். ஆங்க்...உன் மொபைல் நம்பர் என்னவென்று
சொல். என் நம்பரையும் உன் மொபைலில் ஸேவ் செய்து கொள்’, என்று கூறிவிட்டு, அங்கிருந்து
நகர்ந்தான்.
****
2
இடம்: ப்.கிருஷ்ணனின்
வீடு.
நிகழ்வு: கிருஷ்ணனின்
மனைவி ப்ரியம்வதா, மூத்த மகன் நாராஜ், அவன் மனைவி ஆட்டிக்கா. அவர்கள்
சிற்றுண்டி என்ற பெயரில் இட்லி, வடை என்று
சாப்பிடுவதிலேயே கவனமாக இருந்தனர். அப்போது, துப்புகெட்ட போலீஸ் அதிகாரி ராட்டினன் தயங்கித்
தயங்கி ஒரு திருடனைப் போல் நுழைந்தான். நல்ல
நேரம் பார்த்துதான் வந்தாற் போல் நாக்கைத் தொங்க விட்டுக் கொண்டான்.
ராட்டினன்:
ஒருவரும் தன்னைக் கவனிக்காததை அறிந்து, ஒரு முறை கணைத்தான். குரல் கேட்டு எல்லோரும் தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தனர்)
‘என்ன! இட்லி செஷனா? இப்பல்லாம், டீ.வீ சீரியல்லாம், டிபன் சாப்பிடும் ஸீன் அடிக்கடி இருக்கும். அதில் கூட பெரும்பாலான சமயங்களில் டிபனென்றால், இட்லிதான்
இருக்கும். அது போல, இங்கேயும் இன்று இட்லிதானா?’
என்று ஒரு ஜோக் சொன்னது போல் கூறிவிட்டு, தன்னை யாராவது நீயும் சாப்படுகிறாயா என்று
கேட்க மாட்டார்களா என்று ஒரு ஏக்கத்துடன் பார்த்தான்.
ஒருவரும்,
அவன் ஜோக்கை ரசித்தது போல் தெரியவில்லை. அவனை சாப்பிடுகிறாயா என்றும் கேட்கவில்லை.
ப்ரியம்வதா:
(மனதுக்குள், ஒரு காரியத்திற்கும் துப்பில்லை. அக்காவென்று உறவு கொண்டாடிக் கொண்டு
வந்து விடுவான்; இவனுக்கு இட்லி ஒரு கேடு,
ஒரு காப்பி கொடுத்தாலே போதும் என்று எண்ணினாள்) ‘வா ராட்டினன்; இவருக்கு இட்லி
என்றாலே மிக விருப்பம். அதான்; சரி, பணம் தொலைந்ததைப்
பற்றி எதாவது துப்பு கிடைத்ததா?’
ராட்டினன்:
(ஆமா, ஒன்றுக்கும் உருப்படியில்லாத உதவாக்கரை பிள்ளையை பெத்துவிட்டு, இப்போ போலிஸ்காரனை
புடிங்கினால் என்ன மந்திரமா பண்ண முடியும் என்று நாராஜை மனதிற்குள் திட்டிக் கொண்டான்.
ஒரு எழவு துப்பும் கிடைக்கவில்லை. ஆகவே, ஏதாவது சொல்லி மழுப்பி விடுவோம் என்றும் எண்ணிக்கொண்டான்)
‘துப்பு நிறைய கிடைத்துள்ளது. அவைகளை என் ஆபிஸர்கள்
அலசிக் கொண்டிருக்கிறார்கள். கூடிய சீக்கிரமே அந்த இரு ரௌடிகளையும் பிடித்து விடுவோம்.
பணத்தையும் கைப்பற்றி விடுவோம். கவலையே வேண்டாம்.’
நாராஜ்:
‘மாமா, அந்த பணத்தில் முதலில் கொஞ்சமாவது இப்போ கிடைத்தால் செலவு செய்ய உதவும். அதற்கு வாய்ப்பில்லையா?’ என்று தன் குடும்பத்திற்கே
உரித்தான முட்டாள்தனமான ஒரு கேள்வியைக் கேட்டான்.
ப்ரியம்வதா:
(தன் மகனின் அறிவு பொதிந்த கேள்வியைக் கேட்டு) ‘நீ சொல்வதும் சரிதான், நாராஜ். ராட்டினனை
நம்பினால் பணம் முழுவதும் வருமோ வராதோ என்ற சந்தேகம் எனக்குமுண்டு’. என்று தன் அறிவு
ஜீவியான மகனை பாராட்டினாள்.
ராட்டினன்:
(தன் மனதிற்குள் நாராஜை கடித்து துப்பி விடலாமென்று தோன்றினாலும்) ‘சந்தேகமே வேண்டாம்.
முழு பணமும் திரும்பி வந்து விடும். இன்னும் ஒரு வாரத்திற்குள் அந்த இருவரையும் பிடித்து
வராவிட்டால், என்னை சஸ்பெண்ட் செய்து விடுவதாக என் மேலதிகாரி கூறிவிட்டார். ஆகவே, மிக தீவிர முயற்சியில் நாங்கள் ஈடு பட்டுள்ளோம்.’
தன் உதறலை அதிகமாக வெளிக்காட்டாமல் மழுப்பினான்.
ப்ரியம்வதா:
‘சரி. காப்பி சாப்பிடாமல் நீயும் போகப் போவதில்லை’, என்று கூறி, ஆட்டிகாவை ஒரு காப்பி
தயார் செய்துகொண்டு வருமாறு கூறினாள்.
ஆட்டிகாவும்
தன் மாமியாரை மனதில் கரித்துக் கொண்டே கிட்சனுக்குள் நுழைந்தாள்.
ராட்டினன்,
இதைக் கண்டெல்லாம் ஒரு மாற்றமும் ஆகாமல், சிரித்துக்
கொண்டே, ‘அவசரமில்லை. நல்ல கும்பகோணம் டிகிரி காப்பியாட்டம் போட்டு எடுத்து வா’ என்று
கூறி விட்டு ஏதோ யோசனையில் ஆழ்ந்தவன் போல் கண்களை மூடிக் கொண்டான்.
ப்ரியம்வதா:
‘இவன் கெட்ட கேட்டிற்கு கும்பகோணம் டிகிரி காப்பி தேவைதான், ‘ என்று முணுமுணுத்தாள்.
அப்போது,
கிருஷ்ணனின் நண்பன் அசட்டு அப்பாவு தன் சொத்த
மாப்பிள்ளை சொம்புவுடன் வந்தான்.
அசட்டு
அப்பாவு: அடேடே, ராட்டினனும் இங்கேதான் இருக்கிறானா? என்று கூறிக் கொண்டே அவனருகில்
சென்று அமர்ந்தான். அவன் மாப்பிள்ளை சொத்த சொம்புவும் அவர்கள் அருகில் அமர முயற்சித்தான்.
ராட்டினன்:
கோபத்துடன், ‘சொம்பு, உனக்கு இங்கென்ன வேலை? உன் நடவடிக்கை எதுவும் சரியில்லை. உன்னை அந்த கிரிதரனுடனும் அவன் கூட்டாளி ஸேமதுரையானுடனும்
பார்த்ததாக எனக்கு தகவல் வந்திருக்கு. இதில் நீ அவர்களுக்கு உடந்தையாக இருந்தாய் என்று
தெரிந்தால் உன்னை முட்டிக்கு முட்டி தட்ட கூட தயங்க மாட்டேன்.’
சொத்த
சொம்பு: ‘ஐயையோ! அப்படில்லாம் இல்ல அங்கிள்.’ பயந்து உளறினான்.
அசட்டு
அப்பாவு: ‘ராட்டினம், இந்த சொம்பு தப்பு தண்டால் செய்தாலும் செய்வான். ஒரு வேலையும்
கிடையாது. தண்ட சோறு. உள்ள தள்ளி ஜேய்ல்ல களி தின்னான்னா கொஞ்சம் சரியாகிவிடும். ‘
தன் மாப்பிள்ளையை பற்றி என்ன நல்ல அபிப்பிராயம்!
அப்போது,
ராட்டினனுக்கு அவன் மொபைலில் ரிங்க் டோன் அடித்தது. ‘ஏய், ராட்டினம். உன்ன ராட்டினம்
சுத்துவது போல சுத்து சுத்து என்று சுத்திக் கிட்டிருக்கானே உன் மாஜி போலிஸ் கிரிதரன்.
அவன் இப்போ என் கையில். அவன் உனக்கு வேண்டுமென்றால் எனக்கு ஒரு உதவி செய்யனும். முடியுமா?’
என்றான் பேர் தெரியாத ஒரு நபர்.
ராட்டினன்:
‘டேய், டேய்....நீ யார்டா?’ என்று இரைந்து கத்தி பேசினான். ஆனால், அவனுக்கு உள்ளூர ஒரு ஆசைதான். எப்படியாவது இந்த இரு கொலைகாரர்களைப் பிடித்து விட
வேண்டும்; தன் வேலையைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இது ஒரு சந்தர்ப்பம் என்று நினைத்தான்.
அதனால், தன் குரலை மிகவும் தாழ்த்திக் கொண்டு,
‘சரி, சரி... நாம எங்க மீட் பண்ணலாம்.’ என்று கேட்டான்.
அந்த
ஆள்: ‘டேய்.. ராட்டினம்....ஏதாவது சொதப்பின, உன் வேலைக்கே உலை வந்துடும்.’ என்று மிரட்டி
விட்டு, ‘சரியாக மாலை ஆறு மணிக்கு உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் பார்க்குக்கு வா.
உனக்கு எல்லாம் விளக்கறேன்.’ என்று கூறிவிட்டு
லயனை கட் செய்து விட்டான்.
எல்லோரும்,
ராட்டினன் இருந்த பக்கம் திரும்பி பார்த்தனர்.
ராட்டினம்: ‘எனக்கு அவசர வேலை இருக்கு.
பிறகு வருகிறேன்.’ என்று கூறி சென்றான்.
ப்ரியம்வதாவும் கடவுளிடம் முறையிட,
கோவிலுக்குப் போவதாகக் கூறி, கிளம்பினாள். (இவள் ஒருத்தி தன்னை பெண் தெய்வம் சாவித்திரி
என்ற நினைப்பில் கடவுளை நம்பி தடுக்கி விழுந்தால், கோவிலுக்குச் சென்று விடுவாள்).
******
3
இடம்:
காளி கோவில்.
நிகழ்வு:
ப்ரியம்வதா நுழைகிறாள். அவள் பின் தொடர்ந்து
வாராணியும் நுழைகிறாள். அம்மன் சன்னதியை அடைந்தார்கள்.
இருவரும் ஒருவர் ஒருவரைப் பார்த்து பேசத் தொடங்குகிறார்கள்.
ஒரு அறிவு பூர்வமாக இருவருக்கும் பேசத்தெரியாது
என்பது எல்லாருக்கும் தெரிந்த உண்மை.
ப்ரியம்வதா: ‘ஹே! வாராணி. எங்க இந்தப்
பக்கம்?’
வாராணி: ‘அட, ப்ரியம் (செல்லமாக)....
நீ எப்படி இருக்க? நீதான் அடிக்கடி கோவிலுக்கெல்லாம் வருவாய். இன்று என்ன வேண்டுதலுக்காக வந்திருக்கிறாய்?’
ப்ரியம்வதா: ‘ஆமாம். எப்ப பார்த்தாலும்,
ஒன்றுக்கும் உதவாத என் கணவன் இல்லேனா, என் பசங்க எதையாவது துலைத்துவிட்டு திருட்டு
முழி முழிப்பார்கள். இப்பவும், ஐந்து கோடி
ரூபாயை எங்கேயோ தொலைத்துவிட்டு கையை பிசைகிறார்கள். யாரோ அவருக்குத் தெரிந்த ரவுடி அரசியல்வாதியாம்.
அவனிடம் சொல்லியுள்ளாராம். அவன் கமிஷன் கேட்கிறானாம்.
அதான், அந்த ரவுடி கையில கிடைக்கு முன் அந்த
பணத்தை கண்டுபிடிக்க எங்க போலிஸ் நண்பன் ராட்டினன் என்று ஒருவரிடமும் சொல்லியிருக்கிறோம்.
எப்போதும், நான் இந்த காளி அம்மாவிடம் வந்து முறையிட்டு வேண்டிப்பேன்.
என் தலை எழுத்து. அதான் இப்பவும் இங்கே வந்துள்ளேன்.’
வாராணி: (மனதில் நினைத்துக் கொண்டாள்.
அட, நம்ம கணவன் கூட ஏதோ ஒரு ஆளு இப்படி பணம் தொலைத்த விஷயத்தைப் பத்தி சொன்னார். அவருக்கு
இந்த பணம் கிடைக்கனுமென்று நான் வேண்டிக்க இங்க வந்திருக்கேன். இந்த அசடு இப்ப நம்ம
கணவனுக்கு ஆப்பு வைச்சுட்டு பணத்தை எடுத்துக்க பார்க்கிறா). ‘ நான் சும்மாதான் இப்படி
வந்தேன்’, என்று ஒரு பொய்யைச் சொல்லி மழுப்பினாள்.
இரண்டு பேரும் தன் தன் வேண்டுதல்களை
கடவுளிடம் கூறிவிட்டு, நகர்ந்தார்கள்.
வாராணி உடனே தன் கணவருக்கு ஒரு ஃபோன்
கால் போட்டு ப்ரியம்வதா கூறியதை சொன்னாள். அதைக் கேட்ட வாரா. கிருஷ்ணனுக்கு ப். கிருஷ்ணனின்
மேல் கோபம் வந்தது. தனக்கு கமிஷன் கொடுக்க மனமில்லையா. சரியான சந்தர்ப்பத்தில் கிருஷ்ணனுக்கு
தான் யார் என்பதைக் காட்ட வேண்டுமென்று நினைத்தான்.
(காளி அம்மன் தனக்குள் ஒரு புன்னகை
புரிந்தாள். அட சோமாறிகளா. இரண்டும் இரண்டு
ஆப்பை; ஆனா, இது இரண்டும் மறை கழண்ட ஆப்பை என்று எண்ணி இவர்கள் இருவருக்கும் ஒரு பாடம் புகற்ற வேண்டியதுதான்
என்று தன் கண்ணை மூடிக் கொண்டாள்).
****
4
இடம்:
ராட்டினன் வீட்டு அருகில் இருக்கும் பாழடைந்த பார்க்.
நிகழ்வு:
ராட்டினன் எல்லா கடவுளையும் வேண்டிக் கொண்டு அந்த ஆளுக்காக காத்திருந்தான். அப்போது, ஒரு ஓட்ட மோட்டார் சைக்கிளில் ஒரு போலிஸ்
உடையில் ஒரு ஆள் வந்து இறங்கினான். அவன்தான்
சொதப்பல் சௌதமன். ராட்டினனுக்கு சற்று கன்ஃபுயூஷன்
ஆகி விட்டது. எதற்கு இப்போ இந்த சொதப்பல் வருகிறான். அவனுக்கும் நம் போல் அந்த ஆள் எதாவது போன் செய்திருப்பானோ?
ஒன்றும் புரியாமல், எப்போதும் போல் திரு திருவென்று
முழித்தான்.
சௌதமன்: ‘ஹை! ராட்டினன். நான் இந்த
சோம்பேரிப் பேட்டை போலிஸ் ஸ்டேஷன்ல சீனியர் இன்ஸ்பெக்டரா இருக்கேன். நான்தான் உன்னை இங்கே வரச் சொன்னேன்! என்ன, ஆச்சரியமா இருக்கா?’ என்றான்.
ராட்டினன்: ‘உண்மையாகவே உன்...உங்களை
இங்கே எதிர் பார்க்கலதான். ஆமாம், நீ ஒரு
கேஸ்ல சுதப்பிட்டியாமே! ஏதாவது லீட் கிடைத்ததா?’
சௌதமன்: ‘இப்போ நம்ம இரண்டு பேருக்கும்
ஒரே ஆளுங்கதான் தலைவலி கொடுங்கறாங்க. இந்த கிறுக்கன் கிரிதரனும், திருதிரு விழி ஸேமதுரையும் சேர்ந்து ஒரு கொலை செய்துள்ளதாக
ஒரு கம்ப்ளைன்ட் வந்திருக்கு. அதை மூன்று மாசமா விசாரித்து வருகிறேன். யாரோ ஒரு சொத்த சொம்புன்னு ஒரு பய அவங்களுக்கு கைக்கூலி
வேலை பார்க்கிறானாம். அவனுக்கு எல்லாம் தெரியுமாம்.
அவன் என் கண்ணுக்குத் தெரியாம டிமிக்கி கொடுத்துக்
கொண்டிருக்கிறான், அவனை உனக்குத் தெரியுமென்று
எனக்குத் தகவல் வந்தது. அதான் அவனைப் பிடிச்சுக்
கொடுக்க உன் உதவித் தேவைப் பட்டுச்சு. அதான்
ஒரு போனைத் தட்டி விட்டேன் உனக்கு. ‘
ராட்டினன்: ‘அப்படியா! நல்லதா போச்சு.
இப்ப தான் அந்த சொத்த சொம்புவை என் நண்பன் கிருஷ்ணன் வீட்டுல பார்த்தேன். வா, உடனே
போனால் அவனை மடக்கி விடலாம். அப்புறம், நம்ம இரண்டு பேர் கேஸும் இவனைக் கொண்டே கண்டு
பிடித்துடலாம் என்று நினைக்கிறேன்.’
சௌதமன்: ‘அந்த சொத்த சொம்பு அசட்டுப்
பய இல்ல. ஒரு பசுத்தோல் போத்திய புலி. சரி, சரி.... உடனே அங்க போவோம், வா,’ என்று கூறி
இருவரும் கிருஷ்ணனின் வீட்டுக்கு விரைந்தனர்.
****
5
இடம்:
ப். கிருஷ்ணன் வீடு.
நிகழ்வு:
துப்பு கெட்ட போலிஸ் அதிகாரி ராட்டினன், அவன் ஜோடி சொதப்பல் சௌதமனும் நுழைந்தனர். இடிச்ச
புளி கிருஷ்ணன் தன் பிள்ளை உதவாக்கரை நாராஜுடன் ‘ஹைட் அண்ட் சீக்’ விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தான். அதைக் கண்டு,
சொதப்பல் சௌதமன் சற்று திரும்பி தன் தலையில் அடித்துக் கொண்டான். இது என்ன குடும்பம்டா என்றும் எண்ணி ராட்டினனை ஒரு
பொருள் பொதிந்த பார்வையுடன் பார்த்தான். ராட்டினனும்
அவன் ஜோடி சொதப்பல் சௌதமனும் வந்ததைப் பார்த்து, கிருஷ்ணன் கூறினான்.
ப். க்ருஷ்ணன்: ‘என்ன, ராட்டினா! இப்பதான்
இங்கிருந்து போனாய். செவுத்துல பட்ட பந்தாட்டம் இவ்வளவு வேகமாய் வந்திருக்கிறாய். இந்த போலிஸ் அதிகாரி யார்?’
ராட்டினன்: ‘இவர் என் சக போலிஸ் அதிகாரி
‘சொதப்பல் சௌதமன்’. ஆமாம், நான் முன்பு வந்த போது, இங்கே அசடு அப்பாவுவும் அவன் மாப்பிள்ளை
சொத்த சொம்புவும் இருந்தார்களே? அவர்கள் எங்கே
இப்போது?’ என்று ஒரு ஏமாற்றத்துடன் கேட்டான்.
ப். க்ருஷ்ணன்: ‘அவர்களா! சொத்த சொம்புவுக்கு
யாரோ ஒரு அரசியல் வாதி நண்பராம். அவரிடமிருந்து
ஃபோன் வந்தது. உடனே அவன் இங்கிருந்து ஓடி விட்டான்.
அப்பாவுவும் தனக்கு ஏதோ வேலையிருப்பதாகக் கூறி
சென்றுவிட்டான். எதற்காக அவர்களைப் பற்றி கேட்கிறாய்?’
சொதப்பல் சௌதமன்: ‘இல்லை, எனக்கு அந்த
சொத்த சொம்புவைப்.......’
ராட்டினன்: சொதப்பல் சௌதமனை அதற்கு
மேல் பேச வேண்டாமென்று சைகை செய்துவிட்டு, தான் தொடர்ந்தான். ‘இல்லை, கிருஷ்ணன், நம்ம சொம்பு இவருக்கு தூரத்து
உறவு. ரொம்ப நாளா பார்க்கவேயில்லை என்று சொன்னார். நான்தான்
அவன் இங்கிருக்கிறான் என்று சொல்லி அழைத்து வந்தேன்.’
அப்போது, கிருஷ்ணனுக்கு அவன் மொபைலில்
ஒரு ஃபோன் கால் வந்தது.
ப். கிருஷ்ணன்: ‘ஹலோ, யாரு, போண்டா
கிருஷ்ணன் என்ற வாரா கிருஷ்ணன்தானே!, என்ன சொல்லு?’ என்றான்.
வாரா க்ருஷ்ணன்: ‘அடே, நீ பெரிய அறிவாளிதான்.
எப்படி நான் ஒன்றும் பேசமலேயே, நான் தான் ஃபோன்
செய்தேனென்று சரியாகச் சொன்னாய்?’
ப். கிருஷ்ணன்: ‘அட, என்னப்பா! இப்படி
கேட்கிறாய்? உன் பெயரைத்தான் என் மொபைலில்
ஸேவ் செய்து வைத்துள்ளேனே!’ தான் ஏதோ சாமர்த்தியமாகப் பேசுவதாய் காட்டிக் கொண்டான்.
வாரா கிருஷ்ணன்: ‘அது சரிதான். இருந்தாலும்,
நீ ஒரு புத்திசாலித்தான்!’ அவனுக்கு ஐஸ் வைத்து பேசின்னான். அவனுக்கு, அவன் நண்பன்
பணத்தில் ஒரு பெரிய தொகையை அடிப்பதிலேயே குறி. என்னவிருந்தாலும், ஒரு அரசியல்வாதியில்லையா!)
ப். கிருஷ்ணன்: ‘சரி, என்ன விஷயம் சொல்லு?’
வாரா. கிருஷ்ணன்: ‘நல்ல சேதிதான். உன்
திருட்டு போன பணம் கிடைக்கும் தருவாயில் இருக்கிறது. என்னிடம் ஒரு அசடு போல இருக்கும் ஒரு பய மாட்டியிருக்கான்.
நம்ம ஆளுங்க அவனை என்னிடம் கொண்டு வந்திருக்காங்க. இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில்
நம் கைக்கு பணம் கிடைத்துவிடும்.’
ப். கிருஷ்ணன்: ‘மிக்க மகிழ்ச்சிப்பா.
நான் என்ன செய்யனும்?’
வாரா. கிருஷ்ணன்: ‘நீ எனக்கு சுத்தமா
25 சதவீதம் கமிஷன் கொடுத்துடனும். பண விஷயத்தில் நாம் சரியாகப் பேசி புரிஞ்சிக்கனும்.
அதான், முன் கூட்டியே உனக்கு சொல்லி விடலாமென்று
ஃபோன் செய்கிறேன்.’
(ராட்டினன் வேகமாக கிருஷ்ணனின் அருகில்
வந்து அவனுடன் ஃபோனில் பேசுபவர் எங்கிருந்து பேசுகிறாறென்று கேட்குமாறு கூறி ஃபோனை
ஸ்பீகர்ல போடுமாறு கேட்டான்.)
ப். கிருஷ்ணன்: சரியென்று தலையாட்டி,
ஃபோனை ஸ்பீகர்ல போட்டு, ‘ஏய், கிருஷ்ணா, எங்கிருந்து பேசுகிறாய்? என்று கேட்டான்.
வாரா. கிருஷ்ணன்: ‘இந்த தூங்குமூஞ்சி
பேட்டை போலிஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள கோவிலுக்குள்ள இருக்கேன்.’ என்று சொல்லிவிட்டு
லயனை கட் செய்தான்.
அதைக் கேட்டு, ராட்டினன், ‘அடாடா, அது
என் போலிஸ் ஸ்டேஷன் கிட்டதான். இப்பவே, நாங்கள் அங்கே போனால் அந்தக் கூட்டத்தைப் பிடித்து
விடலாம். வா,’ என்று கூறி, தன் சகா சொ.சௌவை அழைத்துக் கொண்டுஅங்கிருந்து விரைந்தான்.
சொதப்பல் சௌதமன்: ராட்டினனின் அருகில் வந்து ரகசியமாக, ‘ஏய், நாம்
நம்ம போலிஸ் உடைள போனா அவங்களுக்கு நம்ம அடையாளம் தெரிஞ்சுடும். அதனால சாதாரண ஆட்களப் போல மாறு வேஷம் போட்டுக்கிட்டு போகலாம்,’
என்றான்.
ராட்டினன்: ‘அதுவும் சரிதான். நாம பிச்சக்காரங்க
வேஷம் போட்டா நல்லா பொருந்துமில்ல. நீ என்ன
சொல்லற?’ என்றான்.
இருவரும் மாறு வேஷம் பூண்டு அந்த கோயிலருகே
சென்று அந்த வாரா. கிருஷ்ணனைத் தேடினார்கள். அங்கே, வாரா. கிருஷ்ணனுடன் சொத்த சொம்புவும்
இருப்பதைக் கண்டு ராட்டினத்திற்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. வாராவும்,
சொம்பும் எங்கேயோ செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தனர். அவர்களைத் தொடர்ந்தார்கள் நம் உதவாக்கரை மாறு வேஷ
புலிகள். அடுத்த தெருவில் ஒரு வீட்டில் வாராவும்,
சொம்பும் நுழைந்தார்கள். ராட்டினமும், சௌதமனும்
வேகமாகச் சென்று வீட்டின் பின் வழியாக வீட்டிற்குள் நுழைந்தார்கள். அங்கே அவர்கள் மாஜி போலிஸ் கிரிதரனும், ஸேமதுரையும்
இருந்ததைப் பார்த்தார்கள். அவர்கள் அருகில்
ஒரு ஸூட் கேஸ் இருந்தது. அந்த நால்வரும் ஒன்று
கூடி தீவிர விவாதத்தில் ஈடு பட்டிருந்தனர். ராட்டினமும், சௌதமனும் அவர்களுக்குத் தெரியாமல் பதுங்கி
இருந்து அவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்க முயற்சித்தனர்.
வாரா. கிருஷ்ணன்: ஸேமதுரையைப் பார்த்து,
‘என்ன, நான் சொன்னபடி எல்லா பழைய ரூபாய் நோட்டெல்லாம் பாங்க் மானேஜர் மாத்திக் கொடுத்துட்டான்
போல இருக்கு.’
ஸேமதுரை: ‘அண்ணே, நீங்க பலே லீடர் தாங்க.
அந்த மானேஜர் என்னை நேத்து ராத்திரி நம்ம கிட்ட இருக்கிற பழய ரூபா நோட்டெல்லாம் எடுத்துக்கிட்டு பாங்க் பக்கம் வரச்
சொன்னாரு. அவரு ஒரு அரை மணில எல்லாத்தையும் புது 2000 ரூபா
நோட்டா கொடுத்துட்டாரு. நீங்க ஒரு டக்கரான
பெரிய ஆளுதான். உங்க உதவிக்கு நன்றி அண்ணே.
இதோ இந்த ஸூட் கேஸ்ல எல்லா பணமும் இருக்கு,’
எவ்வளவு மரியாதையாகப் பேச வேண்டுமோ அவ்வாறு
பேசி முடித்தான்.
மாஜி போலிஸ் கிரிதரன்: ‘மிக்க நன்றி
தலைவா,’ என்று வாராவைக் குளிர் படுத்தினான்.
வாரா. கிருஷ்ணன்: ‘சரி சரி... உங்க நன்றியெல்லாம் இருக்கட்டும். என்
அரசியல் செல்வாக்கை உபயோகித்தும், கொஞ்சம் கிம்பளமும் கொடுத்து அந்த மானேஜரை சரி கட்டி
இவ்வளவு பணத்தையும் மாற்றியிருக்கிறேன். அதனால, இந்த ஐந்து கோடில, ஒரு கோடி எனக்கு வேணும். நீங்க மூணு பேரும் ஒரு கோடி எடுத்துக்குங்க. மிச்ச
மூணு கோடியையும் ப்ரியமான கிருஷ்ணனுக்கே திருப்பிக் கொடுத்திடுவோம். அவன் என் ஸ்கூல் நண்பன். அவனுக்கு நான் பணத்தை கண்டு
பிடித்துக் கொடுப்பதாய் வாக்கும் கொடுத்திருக்கேன்.’
மாஜி போலிஸ் கிரிதரன்: ‘அது எப்படி?
அந்த பணத்தை எல்லாம், என் செல்வாக்கை (ஒரு குப்பை செல்வாக்குமில்லை, இருந்தாலும், கூறிக்கொண்டான்)
பயன் படுத்தி, மிகவும் கஷ்டப்பட்டு பாங்க் லாக்கர்ல பாதுகாப்பா வைத்திருந்தேன். அந்த மானேஜரும், இந்த சொம்புக்கு சொந்தக்காரன். அவரோட
ஒரு டீல் போட்டோம். அவரும் அதற்கு ஒத்துக்கிட்டாரு. அதனால, நாங்க மூன்று பேரும் ரொம்ப சிரமப் பட்டிறுக்கோம்.
நீங்க வேணும்னா, ஒரு கோடி வைச்சுக்குங்க. நாங்க மிச்ச நாலு கோடியை பங்கு போட்டுக்கிறோம்,’
என்று சற்று உரக்கவே கூறினான்.
வாரா. க்ருஷ்ணன்: ‘இங்க பாருங்க, நான் நினச்சா உங்க மூணு பேரையும்
போலிஸுல பிடிச்சுக் கொடுக்க ஒரு நிமிஷம் கூட ஆகாது. அதனால, நான் சொன்னா சொன்னதுதான்,’
என்று தன் அரசியல்வாதி தொணியில் பதிலளித்தான்.
மாஜியும், ஸேமதுரையும் பூம் பூம் மாடு
போன்று தலையசித்து விட்டு தங்கள் சம்மதத்தை வெளிப்படுத்தினர். வேறென்ன செய்ய முடியும்?
வாரா. கிருஷ்ணன் அந்தப் பெட்டியிலிருந்து
ஒரு கோடி ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு, ‘இதோ வந்து விடுகிறேன்,’ என்று கூறி வாயிலை
நோக்கிச் சென்றான்.
பதுங்கியிருந்த ராட்டினமும், சௌதமனும்
அதிர்ச்சி தரும் வண்ணம், அவர்கள் நால்வரையும் நோக்கி துப்பாக்கியுடன் பாய்ந்தார்கள்.
மாறு வேடத்திலிருந்ததால், அவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. ஆனால், வாரா.
கிருஷ்ணன் மட்டும் விரைவாக அங்கிருந்து தப்பியோடி விட்டான். ஆகவே அந்த மூவரும் தங்கள் தங்கள் கைகளை உயரத் தூக்கி சரணடைந்தார்கள்.
ராட்டினம்: ‘என்னையா, நீங்க எத்தனை நாளுக்கு டிமிக்கி கொடுப்பீங்க? அதான் உங்களைப்
பிடிக்கவும், உங்களிடம் உள்ள பணத்தையும் எடுத்து போகத் திட்டம் போட்டோம். நடங்க. சௌதமா, நீ அந்த பணப் பெட்டியை எடுத்துக்க. நான் இவங்கள வண்டில ஏத்தறேன்.’
அப்போது, அங்கே திடீரென்று மற்றும்
நான்கு போலிஸ் அதிகாரிகள் வந்தார்கள். அவர்கள்
கைகளிலும் துப்பாக்கிகள் இருந்தன. அவர்களுடன்
அந்த வங்கியின் அதிகாரியும் கையில் விலங்குடன் நின்றிருந்தார். அவர், சொம்பு, ஸேமதுரை மற்றும் கிரிதரனையும் அடையாளம்
காட்டினார். அவர்களுக்கு இந்த ராட்டினத்தையும், சௌதமனையும்கூட அடையாளம் தெரியவில்லை.
அவர்களில் ஒரு அதிகாரி கூறினார்.
அதிகாரி: ‘ இங்கே ஆறு திருடர்கள் இருப்பதாக
எங்களுக்கு தகவல் வந்தது. ஆனால், ஐந்து பேர்களே இருக்கிறீர்கள். எங்கே, அந்த ஆறவது
திருடன்?’
ராட்டினன்: ‘சார், அவன்தான் அரசியல்வாதி
வாரா.கிருஷ்ணன். அவன் அரசியல்வாதியல்லவா! மாட்டிக் கொள்வானா, சார்? நாங்க இரண்டு பேரும்
போலிஸ் அதிகாரிகள்தான். இவர்களைப் பிடிக்க மாறு வேஷம் போட்டுகிட்டு வந்தோம். அவ்வளவுதான்’
என்று விளக்கம் கொடுத்தான்.
அதிகாரி: ‘அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. அந்த
விவரங்களையெல்லாம் கோர்ட்ல வந்து சொல்லுங்க. நீங்க எல்லோரும், பண மோசடி, பழைய ரூபாய்
நோட்டுக்களை திருட்டுத்தனமாக வைத்திருந்தல் போன்ற மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக எங்களுக்குத்
தகவல் கிடைத்தது. அதான் உங்களை ஒரு பொறி வைத்து பிடித்து விட்டோம். எல்லோரும் சரணடையுங்கள்.
இந்த பணமெல்லாம் அரசாங்க கணக்கில் சேர்க்கப்
படும்,’ என்று ஆணையிட்டார்.
அந்த
ஐந்து பேர்களும் எப்போதும் போல் திரு திருவென்று
முழித்துக் கொண்டே போலிஸ் வண்டியை நோக்கி நடந்தனர்.
****
6
வாரா.
கிருஷ்ணன், அரசியல்வாதியல்லவா! எந்த அரசியல்வாதி இது போன்ற மோசடிகளில் மாட்டிக் கொள்கிறான்? கிடைத்த ஒரு கோடி ரூபாயை எடுத்துக்
கொண்டு அவன் தன் தண்ட மனைவி வாராணியை (அவள்தானே கிருஷ்ணன் தனக்கு கமிஷன் கொடுக்க விரும்பவில்லை
என்ற ரகசியத்தைக் கூறினாள்) குஷி படுத்த எண்ணி, அவளுடன் ஒரு வெளிநாட்டு டூர் அடிக்க
விமான நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.
****
7
இடம்: ப். கிருஷ்ணன்
வீடு.
நிகழ்வு: கிருஷ்ணன் எப்போதும்
போல் சோகத்தில் தன் கைகளைத் தன் தாடையில் வைத்து கொண்டிருந்தான். அவன் மனைவி ப்ரியம்வதா
பூஜை அறையில் அமர்ந்து கொண்டு கடவுளிடம் தன் புதுக் குறையைச் சொல்லி அழ வேண்டுமென்று
எண்ணி அங்கிருந்து நகருகின்றாள். ஜாமினில்
வெளியே வந்த போலிஸ்காரன் ராட்டினன், தன் வேலைக்கே உலை வந்து விட்டதாக வருந்தினான்.
அசட்டு அப்பாவு, தன் சொத்த மாப்பிள்ளை அசடு
என்று எண்ணியது எவ்வளவு தவறு என்றும், இப்படி ‘கிருமனல்’ மூளையுடன் இருப்பான் என்றும்
அறியாது இருந்ததை எண்ணி தன் மாப்பிள்ளையைப் பற்றி சற்று பெருமிதமாகவே இருந்தான்.
ராட்டினன்:
‘நடந்தது நடந்து போச்சு. எனக்கு ஒரு ‘கும்பகோணம் டிகிரி காப்பி கொடுங்கள்,’ என்றான்.
ப்ரியம்வதா:
‘இன்று வீட்டில் சமையலே கிடையாது. மேலும், நீ செய்த குப்பை வேலைக்கு கும்பகோணம் டிகிரி
காப்பி கேக்குதோ?’ என்று கத்தி விட்டு கடவுள் அறையை நோக்கி நடந்தாள்.
******
8
முடிவுரை: இந்த கதைத்
தலைப்புக்கும், இந்த கதைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கும் என்று நீங்கள் நினைத்திருந்தால்,
அது கதாசிரியரின் தவறல்ல. அவரின் அறிவு கூர்மையைத்தான் இது காண்பிக்கிறது.
மேலும், ஒரு மெகா ஸீரியல் வகையில், பல முறை ஆஸ்பத்திரி செல்லும்
ஸீன், கார் சேஸிங்க் ஸீன், வில்லன் ஒவ்வொரு முறையும் போலிஸுக்கு டிமிக்கி கொடுக்கும்
ஸீன் என்று ஜவ்வு போன்று இழு இழுவென்று இழுக்கலாம் (இப்போதைக்கு, இந்த இழுப்பே போதும்).
அவையெல்லாம், ‘ப்ரியம்வதாவா? வாராணியா? என்ற தலைப்பில் கூடிய விரைவில் வரும். எதிர் பாருங்கள். அப்படி வந்தா அது உங்க துரதிருஷ்டம்தான்.