Sunday, 16 May 2021

திரிசங்கு நரகம்

 

திரிசங்கு நரகம்

இடம்: சுவர்க்க லோகம்.

நோக்கம்:  கடவுள் தலைவர்களின் முக்கிய ஆலோசனைக் கூட்டம்.

தலைமை: பிரம்மா

கடவுள்கள்: விஷ்ணு, சிவன், இந்திரன், ஜீஸஸ், முஹமது நபி, குரு நானக் மற்றும் பல கடவுள்கள்

யம ராஜன் மற்றும் சித்திர குப்தன் வருகைக்காக காத்திருந்தனர்.

தொலைக்காட்சியில் தமிழ் சினிமா பாடல் ஒளி பரப்பாகிக் கொண்டிருந்தது.

பாடலைப் போடும் முன்பு, தொகுப்பாளர் (ஆன்கர்) சொன்னார்---                படம் -சாந்தி நிலயம், பாடலை எழுதியவர்- கண்ணதாசன், பாடலை பாடியவர்- டி.எம். ஸொந்தர ராஜன்….இதோ உங்களுக்காக----என்று கூறியவுடன், எல்லாக் கடவுள்களின் முகங்களிலும் உற்சாகம் தெரிந்தது.

“கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தானாம்

கண்ணில் கண்ட மனிதர்களை எல்லாம் நலமா என்றானாம்

ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்

ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்……..”

ஒரே கோரஸில் எல்லோரும், “ஆகா, மிக சரியான நேரத்தில்தான் ஒளி பரப்புகிறார்கள்,” என்று ஆவலுடன் பார்த்தார்கள்.

அந்த நேரத்தில், யம ராஜன் மற்றும் சித்திர குப்தனும் வருகை தந்தனர். அவர்களுக்குப் பின்னால், கலகப் பிரியர் நாரதரும் வந்து சேர்ந்தார். மற்ற மதங்களின் முக்கிய இரண்டாவது நிலையில் இருக்கும் கடவுள்களும் வந்து சேர்ந்தனர்.

பிரம்மன், “எல்லோரும் வந்து விட்டார்கள். கூட்டம் தொடங்கட்டும்,” என்று கூறினார்.

சித்ரகுப்தன், “எல்லோருக்கும் நன்கு தெரியும், கொரோனா என்ற அசுரர் கூட்டம் தேவர்களை எதிர்த்து போர் தொடுத்துள்ளார்கள்.  எப்போதும் போல் நேரடி சண்டைக்கு வராது, இந்த தடவை புதிய உத்தியை கையாண்டுள்ளார்கள். கொரோனா என்ற விஷக் கிருமியை பூலோகம் முழுவதும் பரவ விட்டு, சாதாரண உயிர்களை பழி வாங்குகிறார்கள். கொரோனாவினால், பூமியில் கிட்டத் தட்ட இருபது  லக்ஷம் மனிதர்கள் இறந்து இருக்கிறார்கள் என்று என் கணக்கு சொல்கிறது. சுவர்க லோகத்திலும், நரக லோகத்திலும் தங்க இடமேயில்லை. இது போன்ற சூழ்நிலை இதுவரை உண்டானதேயில்லை. இதற்கு உடனடியாக ஒரு தீர்வு காண வேண்டும்,” என்று கூட்டத்தின் முக்கிய நோக்கத்தை முன் வைத்தார்.

மகா விஷ்ணு சித்திரகுப்தனைப் பார்த்து, “ஒரு திருத்தம். இந்த கொரோனாவை பூலோக மக்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்க வேண்டுமென்று, நாரதர்தான் யோசனை கூறினார். அதை தங்களுக்கு சாதகமாக அசுரர்கள் பயன் படுத்திக் கொண்டு விட்டார்கள். நாம் எப்போதும் போல் இப்போதும் அவர்கள் வலையில் விழுந்து விட்டோம். அதே போன்று, நாம் முதலில் அசுரர்களால் துன்பத்திற்கு ஆளாவோம். ஆனால், இறுதியில் வெற்றி நமக்கே கிட்டும்,” என்றார்.

ஜீசஸ், முகமது நபி, புத்தர், குருநானக் எல்லோரும் விஷ்ணு சொன்னதை ஆமோதித்தனர்.  யம ராஜனைப் பார்த்து, “உங்களின் கருத்து என்ன?” என்று கேட்டனர்.

யம ராஜன், “மகா கடவுள்களே, கொரோனாவால், தினம் தினம் கிட்டத்தட்ட பத்தாயிரம் மனிதர்களின் உயிர்களைக் கொண்டு வரும் நிர்பந்தத்தில் நாங்கள் தள்ளப் பட்டுள்ளோம். இதனால், நானும் என் பணியில் இருப்பவர்களும் நன்றாகத் தூங்கி, ஒரு வடருத்திற்கு மேலாகி விட்டது. ஒரு நாள் கூட எங்கள் குடும்பத்துடன் இருக்க முடியவில்லை. விடுப்பும் கிடையாது என்று கூறப் பட்டு விட்டது.  கைகளும் கால்களும் சோர்ந்து விட்டன, எங்கள் வாகனமான எருதுகளும் வலு இழந்து விட்டன. புதியதாக வாங்க அனுமதியில்லை. ஆகவே, நான் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளேன்,” என்று ஒரு புலம்பல் புலம்பி நின்றார்.

ஜீசஸ் யமனைப் பார்த்து, “அப்படியெல்லாம், அவசர முடிவு எதையும் எடுத்து விடாதீர்கள். உங்களுக்கு உதவும் நோக்கத்துடன் தானே இங்கே கூடியுள்ளோம்,” என்று யமனிடம் கூறி சமாதானக் கொடியை காண்பித்தார்.

“ஆமாம், அவசர முடிவு எடுத்தால், பின்பு அவதிப் படுவதும் நாம்தான்,” என்று மற்ற கடவுள்களும் கூற, யமன் தன் இருக்கையில் அமர்ந்தார்.

“சரி, என்னதான் முடிவு இந்த கொரோனா விளையாடும் விளையாட்டிற்கு? ” என்றார் மூத்த கடவுள் இந்திரன்.

“நாரதர்தானே இந்த கலகத்தைத் துவக்கினார். அவரே இதற்கு பதில் கூறட்டும்,” என்றார் முகமது நபி.

எப்போதும் போல் ஒரு விஷம சிரிப்பு சிரித்தபடி, நாரதர், “பதில் சொல்கிறேன். பல வருடங்களாகவே, வாயு, நீர், பூமாதேவி, சில்வானுஸ் (காடுகளைக் காக்கும் கடவுள்), மற்றும் பல இயற்கையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தேவர்களும், தேவதைகளும், நாம்  கொடுத்த சொத்துக்களை  பாதுகாக்காமல், மனிதர்கள் அழிக்துக் கொண்டு இருப்பதாக நம்மிடம் முறையிட்டுக் கொண்டிருந்தார்கள். நாம் இதோ, இப்போதே மனிதர்களுக்கு பாடம் புகற்றுவோம் என்று காலம் கடத்தி வந்தோம். சூறாவளியை அனுப்பி மக்களை ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னோம். அவர்கள் கேட்கவில்லை. பூகம்பத்தை அனுப்பி வைத்தோம். அவர்கள் மாறவில்லை. கடைசியாக, கொரோனாவை அனுப்பி வைத்தோம். பலன் கிடைத்தது. உயிர் சேதங்கள் லக்ஷம் லக்ஷமாக இருந்தன. ஆனால், மனிதர்கள் இயற்கையை மதிக்கத் துவங்கி விட்டார்களென்று எண்ணினோம். ஆகவே, தடுப்பூசி பல வகைகளில் தயாரித்து உலகம் முழுவதும் கிடைக்கச் செய்தோம். இதனால், இதன் வீரியம் குறைந்து மக்கள் மனம் திருந்தி விட்டார்கள் என்று நம்பினோம். இந்த முடிவுகள் நாம் எல்லோரும் சேர்ந்து எடுத்தது என்பதை மறந்து விடக் கூடாது. நடுவில் புகுந்து அசுரர்கள் நம் முயற்சியை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வார்கள் என்று நாம் ஒருவரும் யோசிக்கவில்லையே. இது என் தப்பா?” என்று கூறி தான் அமரலாமா என்று கேட்டுவிட்டு, பதிலுக்கு காத்திராமல் தன் இருக்கையில் அமர்ந்தார்.”

யமன் உடனே எழுந்து, “நான் இதை ஆமோதிக்க விட மாட்டேன். விளையாட்டு நாரதருடையது, மாடு மாதிரி கஷ்டப் பட நாங்கள்தான் கிடைத்தோமா? இதற்கு ஒரு தீர்வுதான் முக்கியம். நரகத்தில் இடமேயில்லை. சுவர்க்கத்தில் உள்ள இடங்களை, தற்காலிகமாக கொரோனாவில் இறந்தவர்களுக்கு கொடுக்கும் நிர்பந்ததில் நான் உள்ளேன். என் பிரச்சனைக்கு ஒரு தீர்வுதான் நான் உங்களிடம் எதிர் பார்க்கிறேன்,” என்று ஒரு அழாத குறையாகக் கூறினார்.

“பிறகென்ன, பிரச்சனை? பாவம் புண்ணியம் பார்க்க இப்போது நேரமில்லை. இனி கொண்டு வரும் மனித உயிர்களை தற்காலிகமாக சொர்க்கத்தில் இடம் ஒதுக்கி விடுங்கள். நிலைமை சீரான பின் அவர்களை நரகத்திற்கு அனுப்பி விடலாம்,” என்றார் ஒரு கடவுள்.

“இல்லை. அது சரி வராது. பாவங்கள் செய்து மன்னிப்பு பெறாதவர்கள் நரகத்தில்தான் இருக்க வேண்டும். ஆகவே, வேறு ஏதாவது வழி சொல்லுங்கள்,” அந்த பரிந்துரையை நிராகரித்தார், மற்றொரு கடவுள்.

அப்போது, ஒரு தேவதை தன் மாறு வேடத்தைக் கலைத்துக் கொண்டே வந்தார்.

அவரிடம்,” என்ன செய்தி கொண்டு வந்துள்ளீர்கள்? உங்களுக்கு ஏன் இவ்வளவு பதற்றம்? இருக்கையில் அமருங்கள்,” என்று அன்பாகக் கேட்டார், இலக்குமிதேவி. இவருக்கு பருக குளிர் பானம் கொடுங்கள் என்றும் கூறினார்,

“இன்றைய பூலோக நிலவரத்தைப் பற்றி ஒரு அதிர்ச்சி செய்தி கொண்டு வந்துள்ளேன். அதன்படி, பூலோகத்தில், கொரோனாவின் வீர்யம் அதிகரித்து விட்டது. முந்திய ஆண்டைவிட இந்த ஆண்டு, அதிக அளவில் இதன் தாக்கம் இருக்கும், மிக அதிக உயிர் சேதங்களும் இருக்குமென்று நம் ஒற்றர்கள் கூறுகிறார்கள்.”

இதுவரை சிவனே என்று இருந்த பரமசிவன், “ஒரே வழி, மகா விஷ்ணு அடுத்த அவதாரம் எடுக்கும் தருணம் வந்து விட்டது என்று கருதுகிறேன். என் யோசனையில், கல்கி அவதாரம் மிகச் சரியாணதாக தோன்றுகிறது.”

இதைக் கேட்டு, சித்திரகுப்தன்,“ யார், திருமதி எம்.எஸ்ஸின் கணவர் கல்கி சதாசிவனையா! அவர் இங்கே சொர்கலோகத்திற்கு வந்து கிட்டதட்ட இருபத்தி நான்கு வருடங்கள் ஆகி விட்டன. அந்த தம்பதியர்களை இப்போ பூலோகத்திற்கு அனுப்பி இந்த அசுரர்களை அழிக்க வேண்டுமென்கிறீர்களா!” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

அதைக் கேட்டு, மகா விஷ்ணு புன்னகைத்தார். பிறகு, “அப்படியே செய்தாலென்ன? எம்.எஸ் தன் வாழ்நாட்கள் முழுவதையும் என் புகழைப் பாடியே என்னையும், மற்றக் கடவுள்களையும் மகிழ்வித்துள்ளார். ஆனால், ஏதோ சொல்ல முடியாத காரணங்களால், தன் முயற்சியால் ஈட்டிய பொருட்களை, வைர மூக்குத்தி உட்பட, எல்லாவற்றையும் விற்று, வாடகை வீட்டில் குடியிருந்து ஏழ்மையிலேயே இறக்கும் படியாகி விட்டது. அதற்கு பரிகாரமாக அந்த தம்பதிகளை பூலோகத்தில் கல்கி என்ற அவதார தம்பதிகளாக அனுப்பி கொரோனா அசுரர்களை அழித்து விடுகிறேன். அதுவரை, நாம் எல்லோரும் சற்று பொறுமையாக இருக்கத்தான் வேண்டும்,” என்று கூறி சபையில் இருக்கும் எல்லா கடவுள்களின் ஒப்புதலையும் பெற்றார்.

யம ராஜன் பொறுமை இழந்து விடுவார் போல் இருந்தார். “நான் படும் கஷ்டங்களுக்கு ஒரு தீர்வுமில்லை. நான், ராஜினாமா செய்வதைத் தவிர எனக்கு வேறு வழி தோன்றவில்லை,” என்று கூறிவிட்டு கூட்டத்திலிருந்து பாதியிலேயே செல்லத் தயாரானார்.

“பொறுமை, பொறுமை, நண்பரே, உங்களுக்கு தற்காலிகமாக ஒரு வழி சொல்கிறேன். கவனமாகக் கேளும்,” என்றார் சிவன்.

“இப்போது கொரோனாவால் இறந்து, இங்கே நரகத்தில் இருப்பவர்கள், இனி கொரோனாவாலும், மற்ற பாபங்கள் செய்து மன்னிப்பு கிடைக்காது இறந்து இங்கே வந்தவர்கள், அப்படி வரும் நிலையில் இருப்பவர்கள், மேலும், பாமர மக்களை ஏமாற்றி அரசியலைத் தொழிலாக நடத்தியவர்கள், நாட்டு துரோகிகள், கொலைகாரர்கள், தொழிலில் ஏமாற்றியே பணக்காரனானவர்கள், இப்படி பட்ட பாதகர்களை கணக்கிடுங்கள். பூலோகத்திற்கும் நரகத்திற்கும் இடையே ஒரு புதிய உலகத்தை உருவாக்கியுள்ளேன். அதன் பெயர் திரிசங்கு நரகம்.  அந்த இடத்தில் கிட்டத் தட்ட நூறு பில்லியன் இறந்தவர்களை தங்க வைக்க முடியும். அவர்களை அங்கே உடனே மாற்றுங்கள். அந்த இடம் நரகத்தைவிட கடினமான வாழ்க்கையாக இருக்கும்.”

“சரியான வழி. நன்றி, பரம சிவனே,” என்று எல்லோரும் ஆமோதித்தனர்.

யம ராஜனும் திருப்தி அடைந்தது போல் இருந்தார். இருந்தும் அவர் விவாதத்தை அப்படியே விடுவதாக  இல்லை. “நன்றி, ஆனால், இன்னும் என் சந்தேகம் தீரவில்லை!” என்று தன் இருக்கையில் இருந்து எழுந்தார்.

“என்ன? சுருக்கமாக கூறுங்கள்,” என்று அவரை துரிதப் படுத்தினார்கள் மற்ற எல்லா கடவுள்களும்.

“கல்கி அவதாரத்தைப் பற்றி தீவிரமாக பேச வேண்டாமா?”

“ஓ, கல்கி அவதாரம் பற்றியா? அதைப் பற்றி திட்டங்கள் தீட்ட வேண்டும். அதற்கு போதிய அவகாசம் தேவை. திட்டம் நன்றாக தீட்டினால்தான் இந்த இருபத்தி ஓராண்டு அசுரர்களை அழிக்க முடியும். அதனால், நூறு பேர்களைக் கொண்ட ஒரு சிறு குழுவை நியமிக்கிறேன். கூடிய விரைவில் இதைப் பற்றி, எல்லோருக்கும் தகவல் அனுப்பப் படும்,” என்று சொல்லிவிட்டு தன் வாகனத்தில் ஏறிச் செல்ல தயாரானார், பரம சிவன்.

கூட்டம் முடிவுற்றதாகக் கூறி எல்லோருக்கும்  நன்றி தெரிவித்து விட்டு பிரம்மாவும், மகா விஷ்ணுவும் தங்கள் இருப்பிடங்கள் நோக்கி நடந்தனர்.

படைப்பு:

Komacha/Santhanam M: 9422524254

Email: santhraj5@gmail.com

 

3 comments:

  1. அருமை

    அபார கற்பனை

    வாழ்த்துக்கள்

    Ambarish

    ReplyDelete
    Replies
    1. அருமையான பதிவு. கற்பனை வளம் நிறைந்த பதிவு. இன்றைய கொரோனா நிலவரத்தை தத்ரூபமாக பதிவு செய்து உள்ளீர்கள்.

      Delete