Tuesday, 1 December 2015

மூன்றாவது கண்


இடம்: செழு நாடு
“நம் நாடு இன்று ஒரு புதிய பாதையை நோக்கிச் செல்லுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. தொழில் உற்பத்தியில் முன்னேற்றம் அடைந்துள்ளோம்; கல்வியில் முன்னேற்றம் அடைந்துள்ளோம்; விஞ்ஞான முயற்சியில் வளர்ந்துள்ளோம்;  அவ்வாறாக, ஒவ்வொரு துறையிலும்  முன்னேற்றம் அடைந்துள்ளோம். மக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் அதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறீர்கள். அதற்காக, நான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன்.”
செழு நாட்டின் ஜனாதிபதி வளர்ச்சிவேந்தன் தன் நாட்டு மக்களைக் கவர்ந்த வண்ணம் மிகத் தெளிவாகவும், மிக உள்ளன்புடனும் தன் சொற்பொழிவை ஆற்றினார்.
செழு நாட்டின் இரு எல்லைகள் கடலால் சூழ்ந்திருந்தன. ஒரு எல்லை தொழு நாட்டுடனும் மற்றொரு எல்லை வீரிய மலைத் தொடருடனும் இருந்தன. இதன் தலை நகரம் கடலோரமாக உள்ள கடலூர் ஆகும்.
ஜனாதிபதியின் அலுவலகம் கடலை நோக்கி இருக்கும் வண்ணம் அதன்  மிக அருகில் கட்டப் பட்ட மாளிகையில் அமைந்திருந்தது. அவர் தங்கும் இடமும் அலுவலத்தின் அருகிலேயே இருந்தது.
வளர்ச்சிவேந்தனின் உந்துதலால், நாடு எவ்வாறு முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லுகிறது என்றும், மக்கள் கடமைகள் என்ன என்றும், வாட்ஸ்அப், ட்வீட்டர், ஃபேஸ்புக் என்று எல்லா கணித்தளங்களும் விவாதங்களையும், விமர்சனங்களையும், மாற்று கருத்துக்களையும், அள்ளித் தெளித்த வண்ணமாக இருந்தன.
“நம் ஜனாதிபதி ஒரு தீர்க்கதரிசி. நாடு முன்னேற்றம் அடைவதில் மிக அக்கறை கொண்டுள்ளார்.  ஆனால்.....,“ என்று இழுத்தார், செந்தில்.
“என்ன  ஆனால்?”, அவர் நண்பர் செல்வன்.
“நம் நாடு செழிப்புடன் இருப்பதில் அக்கறை காட்டுவது மிக முக்கியமான ஒரு விஷயம் தான். மறுக்க முடியாததும்கூட. ஆனால்.....,“  என்று மீண்டும் இழுத்தார், செந்தில்.
“என்னையா  ஆனால்?”, பொறுமை சற்று குறைந்த வண்ணம் வினவினார் அவர் நண்பர் செல்வன்.
“எங்கப்பா சொல்லுவார், வாங்குடா கடனை, தின்னுடா அல்வாத்துண்டை; அது போல, நம்ம நாடும் வளர்ச்சி,  வளர்ச்சி என்ற பேரில் மக்களின் கடன் சுமையையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வளர்ச்சி தெரிகிறது. மகிழ்ச்சி கூடியதாக தெரியவில்லையே!”, வருத்தம் தொனித்த குரலில் செந்தில் விளக்கம் கொடுத்தார்.
“நம் எல்லோருக்கும் தெரியும், ஜனாதிபதி அலுவலகத்தை ஒட்டியே அவர் வசிக்கும் பங்களா  ஒரு ரம்யமான அமைப்புடன் இருக்கிறதென்று. அதைச் சுற்றி ஒரு பூங்கா,  அதில், கண்ணைக் கவரும் வண்ணம் தோட்டக்கலையில் சிறந்த பொறியாளர்களைக் கொண்டு வித விதமாகவிறுக்கும் மலர்ச் செடிகளும், வெளிநாடுகளிலிருந்து தருவித்த கவர்ச்சி வகைகளான செடிகளும் பார்ப்பவர்களுக்கு பிரமிப்பூட்டுமாறு இருக்கிறது.  நூதன கருவிகளை உபயோகப்படுத்தி தண்ணீர் பம்புகள் வழியாக தோட்டக்கலைங்கர்கள் அங்கங்கே செடிகளுக்கு தண்ணீர் செலுத்திக் கொண்ட்டிருக்கின்றனர். எங்கும் பச்சைபசேலென்றிருக்கிறது. ஆனால்,” என்று மறுபடியும் இழுத்தார், செந்தில்
“அதற்கென்னையா, இப்போது?” பொறுமையின் விளிம்பில் இருந்தார் அவர் நண்பர் செல்வன்.  
“பொறுமை, சற்று பொறுமை நண்பரே, என்று தொடர்ந்தார் செந்தில்
“அவ்வளவு செழுமையாகவா நம் நாடு இருக்கிறது. எல்லா அரசியல்வாதிகளின் தங்கும் இடங்களும் எதோ நம் நாடு என்ன ஸ்விட்சர்லாந்தோ என்று பிரமிக்கவைக்கும் வண்ணம் இருக்கின்றன. ஆனால், நாம் நம் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான குடிநீர் கிடைக்காமல்,  தண்ணீர் டாங்கர்களை நம்பி வாழும் நிலைமையில் இருக்கிறோம்.  நம் நாட்டில் தண்ணீர் டாங்கர்கள் இங்கும் அங்கும் சென்ற வண்ணமாக இருப்பது ஒரு சாதரணமான காட்சியாகி விட்டது. அது உங்களுக்குத் தெரியாதா?  நாட்டின் உயிர் நாடியே தண்ணீர்தான். அந்தத் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலையில் இன்று நாம் இருக்கிறோம். இப்போது, இமய மலையே வற்றிவிடும் வண்ணம் அதைச் சுற்றி பெரிய அணைகளைக் கட்டி வருகிறார்கள். நம் நாட்டின் விவசாய வளர்ச்சிக்கும், நம் குடி தண்ணீர் தேவைக்கும், அண்டை நாடான தொழு நாட்டை நம்பி வாழும் நிலையில்தான் இன்றும் நாம் இருக்கிறோம். அடுத்த உலகச் சண்டை தண்ணீருக்காகத்தான் இருக்குமென்றும், விஞ்ஞானிகள் கருத்து சொல்கிறார்கள்,“ செந்தில் ஒரே மூச்சில் சொல்லி முடித்தார்.
“ஆமாம், ஆமாம். அதுவும் உண்மைதான்; சுத்த தண்ணீர் கிடைக்காததினால் டாக்டர்களுக்குத்தான் நல்லதாயிற்று. தண்ணீர் சார்ந்த நோய்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. சரி, சரி, வாருங்கள், செல்லலாம்.”
நண்பர்களும் பேசிக்கொண்டே வீடு திடும்பினர்.
***
இடம்: செழு நாடு ஜனாதிபதி அலுவலகம்.
ஜனாதிபதி வளர்ச்சிவேந்தன் தன் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் உள்நாட்டு அமைச்சர் இருவரையும் அழைத்திருந்தார்.
“நம் நாடு தொழில் வளத்தில் மற்ற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளது. ஆனால், இந்த வருடமும், மழை பொய்த்ததினால், விவசாயம் செய்ய முடியாமல் உணவு உற்பத்தி குறைந்து விட்டது.  தண்ணீர் தட்டுப்பாடு மிக அதிகரித்துள்ளதாகவும்  செய்தி வந்துள்ளது. நம் நாடு தொழு நாட்டை விட பரப்பளவில் சற்று பெரியதாக இருந்தாலும், நம் நாட்டிற்குத் தேவையான தண்ணீர் நம் நாட்டின் உயிர் நாடி மஹா நதியிலிருந்துதான் கிடைக்கிறது. அதுவோ தொழு நாட்டில் தொடங்கி கடைசியில் ஒரு வாய்க்கால் போன்றுதான் நம் நாட்டிற்கு வருகிறது. அந்த நதியின் முக்கிய பகுதியாய் உள்ள  நதியூரை நம் நாட்டின் பகுதியாக ஆக்கிவிட்டால்தான் நம் நாட்டின் தண்ணீர் பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும். அதனால் தொழு நாட்டிற்கும் அதிக பாதிப்பு இருக்காது. மேலும்,  நம் நாட்டு மக்களின் நலம் தான் நமக்கு முக்கியம். அதை கவனத்தில் கொண்டு நாம் செயல் பட வேண்டும்.” வளர்ச்சிவேந்தன் தன் அமைச்சர்களிடம் தன் மனதில் நிச்சயித்ததை விவரித்தார். அவர்களிடம் நாட்டின் பாதுகாப்பைக் கருதி எடுத்த முடிவுகளை ரகசியமாகவே வைத்துக்கொள்ள ஆணையுமிட்டார். இரு அமைச்சர்களும் அமைதியாக இருந்தனர்.
*****
இடம்: தொழு நாட்டின் ஜனாதிபதி தீர்க்கதர்சனின் அலுவலகம்.
அறையின் உள்ளே நுழைந்தவுடன் எல்லோர் கவனத்தையும் கவரும் வண்ணம் மிகப் பெரியதாக கணினி வழியாகத் தெரிவது இந்த செய்திதான். 
“நம் நாட்டின் பெரும் மதிப்பு மிக்க சொத்துக்கள் மனிதர்களே. மனித மேலாண்மை  நம் நாட்டின் நோக்கங்களைச் சாதிக்க தனிப்பட்ட முறையிலும் சேர்ந்தும் எடுக்கப்படும் முயற்சிகளும் திட்டங்களும் ஆகும்.
ஆகவே, மக்களின் நலனும் அவர்களின் நல் வாழ்க்கையும் தொழு நாட்டின் தெளிவுப் பார்வையாக இருந்தது. அதற்காக ஜனாதிபதி தீர்க்கதர்சன் எடுக்கும் ஒவ்வொரு முடிவும்  மக்களின் நலனை கருவாகக் கொண்டு இருந்ததென்றால் மிகையாகாது.
ஜனாதிபதி தீர்க்கதர்சன் செழு நாடு ஒவ்வொரு வருடமும் வரட்சியால் துன்பப் படுவதை அறிந்தும் இருந்தார். ஆனால் அந்நாட்டின் போர் தொடுக்கும் திட்டங்கள் குறித்து ஜனாதிபதியோ, அமைச்சர்களோ  ஒன்றும் அறியாதவர்களாகவே இருந்தனர்.    
இந்நிலையில், “சரி; மக்கள் நல அமைச்சரையும், கலாச்சார அமைச்சரையும் கூப்பிடுங்கள். பேச வேண்டும்,”  தீர்க்கதர்சன் தன் மூத்த அதிகாரியிடம் ஆணையிட்டார்.
மக்கள் நல அமைச்சரும், கலாச்சார அமைச்சரும் வந்தனர். அந்தந்த அமைச்சர்களின் உயர் அதிகாரிகளும் அவர்களுடன் வந்தனர்.
“31 ஜனவரியன்று உலக கலாச்சாரம் மற்றும் அமைதி தினமாகக் கொண்டப்படுகிறது. அதற்கு இன்னும் ஐந்து மாதங்களே உள்ளன. அதை ஒட்டி,  மாநாடு ஒன்றை நடத்தும் ஏற்பாடுகள் பற்றி நிலை என்ன?”  தீர்க்கதர்சன் வினவினார்.  
மாநாட்டின் தலைப்பு, மாநாட்டின் வடிவம், நடத்த வேண்டிய இடம், யாராருக்கு அழைப்பிதழ்கள் அனுப்ப வேண்டும், முக்கியமாக, வெளிநாட்டிலிருந்து வரும் தலைவர்கள், பிரமுகர்கள் என்று  துல்லியமாக ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் இரு அமைச்சர்களும்  விளக்கம் கொடுத்தனர்.  சில மணி நேர விவாதங்களுக்குப் பின், ‘மக்கள் - நல் வாழ்க்கை - நாட்டின் பங்கு’ என்பதை மாநாட்டின் தலைப்பாகத் தீர்மானம் செய்தனர். மாநாட்டை மழைக்காலம் முடிந்தவுடன் நதியூரில் நடத்துவதாகவும் முடிவு எடுத்தனர்.
விவாதம் முடிந்து அமைச்சர்களும், அதிகாரிகளும் கலைந்து சென்றனர்.
தீர்க்கதர்சன் சற்று கண்ணை மூடி அமைதியானார்.
பிறகு, பாதுகாப்பு அமைச்சரையும், உள் நாட்டு அமைச்சரையும் அழைக்குமபடி ஆணையிட்டார். அவர்களும் உடனே வந்தனர்.
“உலக மாநாடு நதியூரில் நடத்துவதாகத் தீர்மானிக்கப் பட்டுள்ளது. ஆனால், அண்டைய நாடான செழு நாடு, தன் நாட்டின் தண்ணீர் பிரச்சனையை முன் வைத்து அடிக்கடி தொல்லை கொடுத்த வண்ணம் இருக்கிறது. அவர்கள் அரசாங்கம் ஏதோ 200- 300 ஆண்டுகள் முன்பு நதியூர் செழு நாட்டுடன் இருந்ததாகவும், அதனால், நதியூர் தங்கள் நாட்டுக்குத்தான் சொந்தம் என்றும் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆகவே, இந்த மாநாட்டை நதியூரில் நடத்தி, அந்த ஊர் நம் நாட்டின் பகுதிதான் என்று உலகுக்குத் தெரிவிப்பதற்கும் இது நமக்கொரு வாய்ப்பாகும். நாம் ஒரு போதும், நதியூரைத் தொழு நாட்டிற்கு விட்டுக் கொடுக்கவும் கூடாது, நதியூரின் முக்கிய நதியிலிருந்து வரும் தண்ணீரையும் தொழு நாட்டுடன் பகிர்ந்து கொள்ளவும் இயலாது.   
இம் மாநாடு நடக்கும் சமயத்தில், நமக்கு செழு நாட்டிலிருந்து ஒரு தொல்லையும் வராத வண்ணம், பாதுகாப்புப் பணிகளை முடுக்கி விட வேண்டும்.”
ஜனாதிபதி கூறியதை அமைச்சர்கள் மிக கவனமாக கேட்டனர்.
தொலைக் காட்சி அலைவரிசைகள் எல்லாம் அரசின் மாநாடு நடத்தப் போகும் முடிவுகளைப் பற்றிய விவரங்களை வெளி நாட்டு மற்றும் உள் நாட்டு மக்களுக்குத் தெரியும் வண்ணம் வெவ்வேறு கோணங்களில் விளக்கிக் கொண்டிருந்தன.
****
இடம்: செழு நாடு - ஜனாதிபதி அலுவலகம்.
ஜனாதிபதி வளர்ச்சிவேந்தன், பாதுகாப்பு அமைச்சர், வெளிநாட்டு அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் கூடியிருந்தனர். முக்கிய அரசவைக் கூட்டம் தொடர இருந்தது.
பாதுகாப்பு அமைச்சர் தன் கைகளில் சமீபத்தில் கிடைத்த ஸ்கேனிங் ரிபோர்டை மிக கவனமாக வைத்திருந்தார். அந்த ரிபோர்டில்,  தொழு நாட்டின் முக்கிய அரசியல் புள்ளிகள் பற்றியும், மஹா நதி செல்லும் பாதையின் வரைபடமும் தெளிவாக இருந்தன. அதை, ஜனாதிபதி முன் சமர்ப்பித்து அதன் சுருக்கத்தைக் கூறினார்.
“மாநகர் தெற்கு, மாநகர் வடக்கு, புறநகர் தெற்கு, புறநகர் வடக்கு என்று பிரிக்கப்பட்டிருக்கிற நதியூர் நகரம் மஹா நதி செல்லும் பாதையில் இருக்கும் ஒரு மிக முக்கியமான  நகரமாகும். அது தொழு நாட்டின் எல்லையிலிருந்து மிக அருகில் இருக்கும் நகரமும் ஆகும்.”
அவரின் கணிப்புப்படி நதியூரைக் கைப்பற்றி விட்டால், நம் நாட்டின் தண்ணீர் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்து விடலாம். அந்த விதத்தில்,  பாதுகாப்பு அமைச்சர் அந்த நதியூரை கைப்பற்ற ராணுவத்தின் திட்டத்தை விளக்கினார். 
ஜனாதிபதி வளர்ச்சிவேந்தன், பாதுகாப்பு அமைச்சர் அளித்த விளக்கத்தை மிக்க கவனமாகக் கேட்டு விட்டு, சற்று யோசனையில் ஆழ்ந்தார். சற்று நேரம் கழிந்து, எப்போது மழைக் காலம் தொடங்குகிறது?” என்று வினவினார்.
“நம் நாட்டில் இன்னும் ஐந்து மாதங்களில் மழை பெய்யத் தொடங்க வேண்டும். அச்சமயம் தொழு நாட்டில் மழைக்காலம் முடிவுக்கு வரும் சமயமாக இருக்கும். ஆனால், மழை இரண்டு மூன்று வருடங்களாக நம் நாட்டில் பொய்த்து விட்டதே. அப்படியே மழை பெய்தாலும், மிகக் குறைவாகவே பெய்கிறது,”  என்றார் ஜனாதிபதியின் முக்கிய அதிகாரி புத்திகூர்மன். 
“சரி, நாம் நதியூரை பிடிப்பதற்கும் அதுவே சரியான தருணமாகும். ராணுவத்தைத் தயார் செய்யுங்கள்,” ஆணையிட்டார் வளர்ச்சிவேந்தன்.
“அப்படியே செய்து விடுகிறேன்,” என்று கூறினார் பாதுகாப்பு அமைச்சர்.
பிறகு, அமைச்சர்களும் அவர்களின் அதிகாரிகளும் புறப்பட்டுச் சென்றனர். அப்போது, ஜனாதிபதி வளர்ச்சிவேந்தனின் முக்கிய அதிகாரி, புத்திகூர்மன் அவரருகில் வந்து தன் மொபைலில் வந்த செய்தியைக் காண்பித்தார். வளர்ச்சிவேந்தன் புருவத்தைச் சற்று சுருக்கி செய்தியைப் படித்து விட்டு புத்திகூர்மனைப் பார்த்தார்.
***
உலக மாநாட்டில் பங்கு கொள்ள தொழு நாட்டிலிருந்து அழைப்பிதழ் அனுப்புவதாக மொபைலில் முன்னதாகவே செய்தி கொடுத்திருந்தார் செழு நாட்டு தூதுவர். மாநாடு 31 ஜனவரி அன்று நடை பெற இருப்பதாகவும் கூறியிருந்தார்.  வளர்ச்சிவேந்தனுக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. பழம் நழுவி பாலில் விழுந்தது போல், தன் நாடு நதியூரைக் கைப்பற்றும் திட்டத்திற்கு அந்த தருணமே சரியாக இருக்குமென்றும் தீர்மானித்தார். தன் பாதுகாப்பு அமைச்சரை உடனே வருமாறு அழைப்பு விடுத்தார்.
“அமைச்சரே, தொழு நாட்டிலிருந்து உலக மாநாட்டில் பங்கு கொள்ள அழைப்பிதழ் வந்துள்ளது. அது 31 ஜனவரி அன்று நடை பெறவுள்ளது. நாம் நதியூரைப் பிடிக்க ஃபிப்ரவரி இரண்டாம் தேதியே   சரியான தருணமாக இருக்குமென்று எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில், அவ்வளவு பெரிய மாநாட்டை நடத்தி முடித்து விட்டு, தொழு நாட்டின் அரசாங்கமும், மக்களும் மிகவும் சோர்ந்திருப்பார்கள். நம் திட்டமும் சுலபமாக முடிந்து விடும். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?” வினவினார் வளர்ச்சிவேந்தன்.
“ஆகா! அதுதான் சரியென்று எனக்கும் தோன்றுகிறது,” பாதுகாப்பு அமைச்சர் பதிலளித்தார். அவர் மேலும் தொடர்ந்தார்.
“அந்த மாநாடு நடக்கும் தருணத்தை பயன் படுத்தி நம் நாட்டு ஒற்றர்களை முன்னதாகவே மாநாட்டில் கலந்து கொள்ளும் நம் பிரதிநிதிகளாக அனுப்பி வைக்க வேண்டும். அவர்கள் அங்கேயிருந்து நம் முயற்சிக்கு வேண்டிய ரகசிய தகவல்களைக் கொடுக்க மிக உதவியாகவிருக்கும்.” 
“அதுவும் சரியான யோசனைதான். அதற்கு மிகச்சிறந்த  ஒற்றர்களை தேர்ந்தெடுங்கள். நீங்கள் போகலாம்,” என்றார் வளர்ச்சிவேந்தன்.
***
இடம்: செழு நாடு. ஜனாதிபதி அலுவலகம்.
வளர்ச்சிவேந்தன் தன் கணினியில் வரும் ஈ-மெய்ல் செய்திகளையும், கடிதங்களையும் பார்த்துப் படித்துக் கொண்டிருந்தார். அப்போது, நதியூரைக் கைப்பற்றும்  தன் திட்டத்தை சுலபமாக்கும் வகையிலும் ஒரு நல்ல எண்ணத்தை தொழு நாட்டு ஜனாதிபதி மனதில் பதிய வைக்கும் வகையிலும், மக்கள் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் ஒரு திட்டத்தை நிறைவேற்ற அவருக்கு ஆலோசனை தேவைப் பட்டது. உடனே, வெளிநாட்டு அமைச்சர் மற்றும் திட்ட அமைச்சரையும் வருமாறு உத்தரவு இட்டார்.
இருவரும் உடனே வந்து சேர்ந்தனர்.
வளர்ச்சிவேந்தன் தான் நதியூரை கைப்பற்ற இருக்கும் திட்டத்தை கூறவில்லை. ஆனால், அதை மனதில் கொண்டு, நல்லுறவு நோக்கத்துடன் இரு நாடுகளின் மக்கள் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்கும் திட்டம் ஒன்றை கூறுமாறு வினவினார்.
இருவரும், தங்களுக்குள்ளும், தங்களுடன் வந்துள்ள உயர் அதிகாரிகளுடனும் விவாதித்து ஒரு திட்டத்தை அவர் முன் சமர்ப்பித்தார்கள். சுருக்கமாக, திட்டம் இதுதான்.
செழு நாட்டின் ஒரு பகுதி தொழு நாட்டின் ஒரு பகுதி வழியாகச் செல்லும் நிலையில் இருந்தது. இது, இரு நாட்டு மக்களுக்கும் போக்குவரத்தில் மிகவும் துன்பத்தைத் தந்த வண்ணமாக இருந்தது. அப்பகுதி நதியூருக்குச் செல்வதற்கு ஒரு தடையாகவும் இருந்தது; ஆகவே, இவ்விரு இடங்களையும் ஒன்று சேர்க்கும் வண்ணம் ஒரு நீண்ட நெடுஞ்சாலையை அமைப்பது செழு நாட்டு வர்த்தகத்திற்கும் மிக உதவியாக இருக்கும் என்று தங்கள் கருத்தை முன் வைத்தனர்.
“திட்டம் நல்லதாகத்தான் தெரிகிறது. ஆனால், இதைச் செய்து முடிக்க முக்கியமாக இரண்டு தடைகளைத் தாண்ட வேண்டுமே! ஒன்று, தொழு நாடு நம் திட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும். இரண்டு, அவ்வாறு ஒரு நெடுஞ்சாலையை அமைப்பது குறுகிய காலத்தில் முடியுமா?”
வெளி நாட்டு அமைச்சர்,  “நம் திட்டத்திற்கு, தொழு நாட்டின் ஒப்புதலைப் பெறுவதில் அதிக சிரமம் இருப்பதாகத் தெரியவில்லை. நான் அதற்கான வேலைகளை உடனே துவங்க ஆரம்பிக்கிறேன்” என்றார்.
“மகிழ்ச்சி. திட்ட அமைச்சரே, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இத்திட்டத்தை நிறைவேற்ற எவ்வளவு காலம் பிடிக்கும்? மூன்று மாதங்களில் முடிக்க முடியுமா?’  என்று திட்ட அமைச்சரைக் கேட்டார்.
திட்ட அமைச்சர், சற்று யோசனைக்குப் பின், தன் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து விட்டு, “மூன்று அல்லது அதிக பட்சமாக நான்கு மாதங்களிலாவது முடித்து விட முடியும்,” என்று உறுதி அளித்தார்.
ஜனாதிபதிக்கு திருப்தியாகி விட்டது. தன் முக்கிய திட்டமான நதியூரை செழு நாட்டுடன் சேர்ப்பது சாத்தியம் ஆகும் என்று மிக நம்பிக்கையுடன் இருந்தார்.
இரு அமைச்சர்களையும் நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தை அமல் படுத்த வேண்டிய ஏற்பாடுகளை உடனே துவங்க உத்தரவிட்டார்.
***
இடம்: தொழு நாடு. வெளிநாட்டு அமைச்சர் அலுவலகம்.
செழு நாட்டு அமைச்சரின் சிறப்பு தூதர் வெற்றிவீரன் தொழு நாட்டின் உயர் அதிகாரியைச் சந்தித்து தன் நாட்டு ஜனாதிபதியின் நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தை விளக்கிக் கூறினார். 
செழு நாட்டு அமைச்சரும் அத்திட்டத்தில் தந்நாட்டிற்கு பயன் இருப்பதை உணர்ந்து, “உங்கள் திட்டத்தைப் பற்றி என் நாட்டு அமைச்சரிடமும்,  ஜனாதிபதியிடமும் விவாதிக்க வேண்டும், அதற்கு சற்று அவகாசம் தேவை. உங்கள் நாட்டு அமைச்சரை என் நாட்டு அமைச்சரிடம் நேரடியாகப் பார்த்து பேசச் சொல்லுங்கள்,” என்று கூறினார்.
***
இடம்: தொழு நாடு. ஜனாதிபதி அலுவலகம்.
செழு நாட்டு அமைச்சரின் சிறப்பு தூதர் வெற்றிவீரனின் வருகையைப் பற்றி ஜனாதிபதியிடம் விளக்கினார் வெளிநாட்டு அமைச்சர். இந்த நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்திற்காக ஆகும் முழு செலவையும் செழு நாடே ஏற்றுக் கொள்ள முன் வந்திருப்பதாகவும் கூறினார்.
தீர்க்கதர்சன் யோசனையில் ஆழ்ந்தார்.
இரு நாடுகளும் இணைக்கும் வண்ணம் நெடுஞ்சாலை அமைப்பது நல்ல திட்டமாகவே தெரிகிறது. ஆனால், செழு நாடு இத்திட்டத்தின் முழு செலவுகளையும் ஏன் ஏற்றுக் கொள்ள முன் வருகிறது? இதில் ஏதாவது சூது கலந்த திட்டம் இருக்குமோ அல்லது இதன் உள் நோக்கம் என்னவாக இருக்கும்  என்ற சந்தேகமும் எழுந்தது.
அவரின் சந்தேகத்திற்கு காரணமில்லாமல் இல்லை. காலம் காலமாக இரு நாட்டுக்கும் தீராத தண்ணீர் பிரச்னை இரு நாட்டின் உறவையும் மிக பலவீனப்படுத்தி விட்டதுதான் காரணம்.
அவர் தன் வெளினாட்டு அமைச்சரிடம் தன் சந்தேகத்திற்கு காரணத்தைக் கூறினார். வெளினாட்டு அமைச்சருக்கும் சற்று தயக்கம் வந்து விட்டது,  இத்திட்டத்தின் பின் ஏதாவது சதித்திட்டம் இருக்குமோ என்று.
ஆனால், இது போன்ற திட்டம் நம் நாட்டுக்கும் நன்மையைத்தான் அளிக்கும் என்றும் எண்ணினார். இத்திட்டத்தை நிறைவேற்ற நம் நாட்டின் தற்போதிருக்கும் பொருளாதார நிலமையும் இடம் கொடுக்காது என்றும் நினைத்தார்.
நேரமும் காலமும் நமக்கு சரியில்லை என்றால், தவறான முடிவுகள்கூட சரி என்றே நமக்குத் தோன்றும். அதைத்தான் சனி பிடித்து விட்டது என்பார்களோ! அவ்வாறுதான், இப்போது தீர்க்கதர்சனுக்குத் தன் தூர நோக்கப் பார்வையை இழந்து விட்டது போல் தோன்றியது.
அவரே, சற்று நேரம் கழித்து தன் அமைச்சரிடம், செழு நாட்டின் திட்டத்திற்கு, ஒப்புதல் அளித்தார். 
அமைச்சருக்கும் இத்திட்டத்திற்கு ஒப்புதலை ஜனாதிபதி கொடுப்பதற்கு தான் ஒரு காரணமாக இல்லை என்று தன் மனதிற்குள் சொல்லிக்கொண்டு சமாதானம் செய்து கொண்டார்.
“சரி, நம் ஒப்புதலை செழு நாட்டிற்குத் தெரிவிக்கிறேன்,” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.     
***
இடம்: செழு நாடு. ஜனாதிபதி அலுவலகம்.
ஒரு வாரம் கழித்து, இரு நாட்டு அமைச்சர்களும் சந்திக்க ஏற்பாடாயிற்று. இரு நாடுகளை இணைக்கும் வண்ணம் நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்து, ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
ஒப்பந்தம் கையெழுத்தான உடனே, ஜனாதிபதி வளர்ச்சிவேந்தன் நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த தன் அமைச்சர்களுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் ஆணையிட்டார். அவர் தான் போட்ட பெரிய  திட்டத்தின் நெடுஞ்சாலை அமைக்கும் உள் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்தது தனக்குக் கிடைத்த முதல் வெற்றியென்று கருதி மகிழ்ந்தார்.
***
டிசம்பர் மாதத்தில் கடைசி வாரம்.
இடம்: செழு நாட்டின் பகுதியில் நெடுஞ்சாலை தொடங்கும் இடம்.
வளர்ச்சிவேந்தன் அந்த நெடுஞ்சாலையை மக்களுக்கு திறந்து வைத்தார். முதல் வாகனத்தில்,  தொழு நாட்டிற்கு, தன் நாட்டின் பரிசாக தன் நாட்டில் மிக விரும்பும் மிக ருசியான கொய்யாப் பழங்களை அனுப்பி வைத்தார்.
இடம்:  தொழு நாட்டின் பகுதியில் நெடுஞ்சாலை தொடங்கும் இடம்.
மக்கள் கூட்டத்துடன் வெளிநாட்டு அமைச்சரும் காத்திருந்தார். செழு நாட்டிலிருந்து வந்த  பரிசான கொய்யாப் பழப் பெட்டிகளைப் பெற்றுக் கொண்டார்.
இரு நாட்டிலும் வாழ்க்கை இயல்பாக செல்லத் தொடங்கியது.
***
30 ஜனவரி
இடம்: செழு நாடு- பாதுகாப்பு அமைச்சரின் அலுவலகம்.
பாதுகாப்பு அமைச்சர் முப்படை தளபதிகளையும் உடனே தன் அலுவலகத்திற்கு வருமாறு அழைத்தார். மூன்று தளபதிகளும் துரிதமாக வந்தனர்.
அவர்களிடம் ஜனாதிபதியின் நதியூரைக் கைப்பற்றும் திட்டத்தை விளக்கினார்.
“இத்திட்டம், ஃபிப்ரவரி இரண்டாம் தேதி நள்ளிரவிற்குப்பின் தொடங்கி ஃபிப்ரவரி மூன்றாம் தேதி விடிகாலைப் பொழுதுக்குள் முடிவடைய வேண்டும். ஒரு லைட்டினிங்க் அட்டாக்காக இருக்க வேண்டும். தொழு நாட்டில் ஜனவரி 31ம் தேதி உலக மாநாடு நடக்கவிருக்கிறது. அது முடிந்து வெளி நாட்டு பிரமுகர்கள் எல்லோரும் ஃபிப்ரவரி ஒன்றாம் தேதியே தங்கள் தாய் நாட்டிற்கு திரும்பச் செல்வதாக நமக்கு தகவல்கள் வந்துள்ளன. ஆகவே, ஃபிப்ரவரி இரண்டாம் தேதி நள்ளிரவில் நம் தாக்குதலை வைத்துக் கொள்ள தீர்மானமாகியுள்ளது.
“ஃபிப்ரவரி இரண்டாம் தேதியா? முப்படை தளபதிகளுக்கும் இந்த செய்தி மிக ஆச்சரியத்தையும் சற்று அதிர்ச்சியையும் தந்தது. இருந்தாலும்,  ஜனாதிபதியின் ஆணையாயிற்றே; ஆகவே இனி மேலே நிறைவேற்ற வேண்டிய கட்டளைக்காகத்தான்  காத்திருக்க வேண்டும்.
பாதுகாப்பு அமைச்சர் முதலில் தரைப்படை தளபதியிடம், “நம் படைகள் நதியூரைக் கைப்பற்றும் திட்டத்தில் முக்கியமாக மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய விஷயங்கள், இரண்டு. முதலாவதாக,  எவ்வளவு குறைந்த நேரத்தில் நதியூரைப் கைப்பற்ற முடியுமோ அவ்வளவு நேரம்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, இந்த திட்டம் நிறைவேற்றுவதில்  குறைந்த அளவு உயிர் சேதம் ஆகவேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.”
அதற்கு தேவைப்படும் ராணுவ வீரர்களை இம்முற்றுகைக்குத் தயார் செய்ய உடனே நடவடிக்கை எடுக்கும்படி ஆணையிட்டார்.
விமானப்படை தளபதிக்கும், ராணுவ தளபதிக்கும் தான் கூறியவற்றில் கவனம் இருக்க வேண்டும் என்று கூறினார்.
கடற்படை தளபதிக்கு, “உங்கள் பணி நம் நாட்டு கடலோரப் பகுதிகளைப் பாதுகாத்து எவ்வித அத்து மீறல்களும் நேராமல் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு இந்த நதியூர் முற்றுகையில் நேரடியாகப் பங்கு கொள்ள தேவையிருக்காது என்று நம்புகிறேன்.”
கடற்படை தளபதியும் அமைச்சர் சொன்னதை ஆமோதிக்கும் வண்ணம், “சரி, அப்படியே செய்கிறேன்,” என்றார்.
பாதுகாப்பு அமைச்சரின் கட்டளையைப் பெற்றுக் கொண்டு மூன்று தளபதிகளும் அவரவர் அலுவலங்களுக்கு விரைந்தார்கள்.
விமானப்படை தளபதி  அதை நிறைவேற்றும் வண்ணம் உடனே தன் உயர் அதிகாரி ஒருவரை அழைத்து போரில் பங்கு கொள்ள  வேண்டிய  தேவையான விமானங்களுடன் கடலூரிலிருந்து கிளம்பத் தயாராகும்படி ஆணை இட்டார்.
அந்த வேலை அவருக்குப் பிடிக்கவில்லைதான். ஆயினும் ஜனாதிபதியின் கட்டளையை மீற முடியாமல் போரில் விமானப் படையை ஈடுபடுத்த சம்மதித்தார்.
புறப்படும்போது  அமைச்சர் தளபதியிடம் கண்டிப்பாகச் சில கட்டளைகளையும்  இட்டிருந்தார். அதாவது நதியூரை தரைப்படைகள் நெருங்கியதும் அவர்களுக்கு உதவி புரியும் வண்ணம், விமானப் படை இருக்க வேண்டும். நேரடியாக போரில் ஈடுபடக்கூடாது. ஆகவே போரில் பங்கு பெறும் விமானங்களை ஒரு தனியான இடத்தில் நிறுத்திக்கொண்டு, அமைச்சரின் ஆணைக்காகக் காத்திருக்க வேண்டும். பிறகுதான் தாக்குதலில் ஈடுபட வேண்டும். மேலும், விமானப்படை பங்கேற்பதைப் பற்றி வேறு எவருக்கும் தெரியாமல் ரகசியமாகவே வைத்திருக்க வேண்டும்.
தளபதி மனதில் பெரிய பாரத்துடனேயே புறப்பட்டு வந்தார். அவர் கீழிருந்த விமானிகளில் பலருக்கு எதற்காக நதியூரை நோக்கிப் போகிறோம் என்பது தெரிந்திருக்கவில்லை. இதனால் அவருடைய மன வேதனை அதிகமாயிருந்தது. அவர்களிடம் நதியூரை கைப்பற்ற ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் என்று எப்படிச் சொல்வது என்று தயங்கினார். ஏனெனில், விமானிகள் நம் நம்பிக்கையில் இருந்தால்தான் நாம் இடும் ஆணைகளை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று அவருக்கு நன்றாகத் தெரியும்....ஆகவே,  தன் நம்பிக்கைக்கு பாத்திரமான விமானிகளாகத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் ஜனாதிபதியின் திட்டத்தை சுருக்கமாகப் பகிர்ந்து கொண்டார். இப்போதுதான், தளபதிக்கு தன் மனதில் இருந்த சுமையை கீழே இறக்கி வைத்தாற்போல் இருந்தது.
ஆனால், தளபதி திரும்பி வருவதற்குள்ளாகவே விமானிகளுக்கு விஷயம் தெரிந்து விட்டது. இருந்தாலும், தங்களுக்கு ஒன்றும் தெரியாததுபோல் தளபதி கூறிய செய்தியை கவனமாகக் கேட்டார்கள்.
***
ராணுவ தளபதியும் மிக குழப்பத்துடன் தன் அலுவலகத்திற்குத் திரும்பினார். வந்தவுடன், தன் மற்ற அதிகாரிகளைக் கூப்பிட்டு நதியூரைக் கைப்பற்ற வேண்டிய ராணுவ வீர்ர்களை கணக்கு எடுத்தார். அவர்களுக்கு எந்த விதமான தாக்குதல் மேற்கொள்ள வேண்டுமென்றும் விளக்கிக் கூறினார். இந்த திட்டத்தின் முக்கிய நுணுக்கங்களையும் விளக்கினார்.
“நம்மிடம் இருக்கும் சமயம் மிகக் குறைவு - ஒரு சில மணி நேரங்கள்தான். நதியூரைக் கைப்பற்ற.    இத்திட்டம், ஃபிப்ரவரி இரண்டாம் தேதி நள்ளிரவிற்குப்பின் தொடங்கி,  ஃபிப்ரவரி மூன்றாம் தேதி விடிகாலைப் பொழுதுக்குள் முடிவடைய வேண்டும். ஒரு லைட்டினிங்க் அட்டாக்காக இருக்க வேண்டும்.” தனக்கு கிடைத்த ஆணையைத் திரும்பி தன் அதிகாரிகளுக்குக் கூறினார்.
***
31 டிசம்பர்
இடம்: நதியூர், தொழு நாடு.
நதியூர் விழாக் கோலம் பூண்டு புதுப்பொலிவுடன் தோன்றியது. வெளி நாட்டு பிரமுகர்களும், அரசு அதிகாரிகளும், நகரம் முழுவதும் அங்குமிங்கும் சென்ற வண்ணமாக இருந்தனர். ஜனாதிபதி தீர்க்கதர்சன் மற்றும் அவரின் எல்லா அமைச்சர்களும் வந்திருந்தனர்.
உலக அமைதி மாநாடு பாரம்பரிய வழியில் தொடங்கியது.
ஜனாதிபதி தீர்க்கதர்சன், நவீன உத்திகளான கணினி வழங்கல் முறையை உபயோகித்து தன் தொடக்க விழாப் பேருரையை ஆற்றினார்.  
திரையில் மூன்று குரங்குகள் இருக்கும் பொம்மையின் புகைப்படத்தைக் காண்பித்தார். தொடர்ந்து, அதற்கு விளக்கமும் கொடுத்தார்.
 
“நம் எல்லோருக்கும் தெரியும். அந்த மூன்று குரங்குகளில் ஒன்று தன் இரு கண்களை மூடிக்கொண்டும், இரண்டாவது தன் வாயை பொத்திக்கொண்டும், மூன்றாவது தன் இரு காதுகளை பொத்திக்கொண்டும் இருக்கின்றன. அந்த மூன்று குரங்குகள் பொம்மை கெட்டதைப் பார்க்காதே, கெட்டதை பேசாதே, கெட்டதை கேட்காதே என்ற செய்தியை நமக்குக் கூறுவதுபோல் அமைந்துள்ளது.  இந்த பொம்மை, மகாத்மா காந்தியை மிக கவர்ந்தது என்றும் நம் எல்லோருக்கும் தெரியும். அது, ட்வெண்டியத்து சென்சுரி. நாம் இருப்பதோ  ட்வெண்டி ஃபர்ஸ்ட் சென்சுரி. ஆகவே நாம் சற்று மாற்றி யோசிக்க வேண்டும். அடுத்து வரும் படத்தைப் பாருங்கள் என்று கூறி திரும்பவும் மூன்று குரங்குகள்  இருக்கும் பொம்மையின் புகைப்படத்தைக் காண்பித்தார். மேலும் தன் விளக்கத்தையும் சொன்னார்.
இந்த குரங்குகள் சற்று வித்தியாசமாக இருக்கும். முதல் குரங்கு ஒரு மொபைலைக் காதில் வைத்துக்  பேசிக் கொண்டிருக்கிறது. இரண்டாவது குரங்கு .காதில் ஒரு ஹெட்போனை வைத்துக் கொண்டு எதையோக் கேட்டுக்கொண்டிருக்கிறது. மூன்றாவதோ ஒரு பைநாகுலரை கண்களில் வைத்துக்கொண்டு தூரத்தில் என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருக்கிறது. அவைகள் நல்லதை அல்லது கெட்டதை பேசுவதோ, கேட்பதோ அல்லது பார்ப்பதோ அவர்களுக்கு கிடைத்த சுதந்திரமாக நினைக்கின்றன போன்று தோன்றுகிறதில்லையா? அது போன்று, நம் நாட்டு மக்களிடம் நம்பிக்கை வைத்து நாங்கள் எங்கள் ஆட்சியை மக்களுக்காக அர்ப்பணித்து செயல் பட்டு வருகிறோம். அந்த சிந்திக்கும் சுதந்திரத்தை நம் மக்களுக்கு கொடுத்து விட்டோமென்றால் மிகையாகாது. இதனால் வரும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பாளியாக்கப் படுகிறோம். ஆகவே, மக்கள் நவீன உத்திகளைப் பயன் படுத்துதலில் ஆவல் காட்ட வேண்டும். அதே சமயம், நல்லதையே பார்க்கவும், நல்லதையே பேசவும், நல்லதையே கேட்கவும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டுமென்று அவர்களை ஊக்குவித்தார்.
மக்களின் கூட்டம், ஜனாதிபதியின் சொற்பொழிவைக் கேட்டு, பலத்த கரகோஷம் எழுப்பின.
இதைத் தொடர்ந்து, ஒரு தண்ணீர் ஆராய்ச்சியாளர், தன் முயற்சியால் கிடைத்த நன்மைகளை விளக்கினார். ஒரு காணொளி மூலமாக, நதியூருக்கருகில் உள்ள ஒரு கிராமத்தின் அமைப்பைக் காண்பித்து விளக்கம் கொடுத்துக்கொண்டு தன் சொற்பொழிவை ஆற்றிக் கொண்டிருந்தார். அந்த காணொளியில் காண்பிக்கப்பட்ட கிராமம், கருகிராமம், எங்கும் வறண்டு, ஊர் மக்கள் தொலை தூரத்திற்குச் சென்று தண்ணீர் கொண்டு வரும் காட்சியும், விலங்குகள் போதிய தண்ணீர் கிடக்காததினால் ஆரோக்கியம் குன்றியும் காணப்பட்டன. வயல்கள் காய்ந்து வரண்டு கிடந்தன. அந்த கிராமத்தின் பட்த்தைப் பார்க்கும் எவருக்கும் விவசாயம் இந்த கிராமத்தில் நடக்கிறதா என்று ஒரு சந்தேகம் எழும் வகையில் இருந்தது.  நாம்  இன்று இந்த கிராமத்திற்குச் சென்று, அங்குள்ள மக்களுடன் அளவலாகப் போகிறோம்.    அதில் கலந்து கொள்வதற்கு விருப்பமுள்ளோர் உடனே தங்கள் பெயர்களைக் கொடுங்கள் என்றும் அறிவித்தார்.
உணவு இடைவேளைக்குப் பின், கிராமத்திற்குச் செல்வதற்கு மாநாட்டிற்கு வந்திருந்த பிரதிநிதிகளில் கிட்டத்தட்ட 50 பேர்கள் முன் வந்தனர். அவர்கள் ஒரு பேரூந்தில் கிளம்பத் தயாராகினர்நிகழ்வு மேலாளர்கள், அந்தப் பிரிதிநிதிகள் ஒவ்வொருவருக்கும் செல்லும் வழியில் உபயோகப்படும் வண்ணம், ஒரு சான்விட்ச் பாக்கெட்டும் ஒரு தண்ணீர் பாட்டிலும் கொடுத்தார்கள். அவர்களுடன் அந்த கிராமத்திலுருந்து இரண்டு விவசாய நண்பர்கள் தொடர்ந்து சென்று தங்கள் கிராமத்தைப் பற்றி விளக்கம் தந்து உதவ வந்திருந்தனர். அவர்களுக்கும் ஆளுக்கொரு  தண்ணீர் பாட்டில் விரும்பிக் கொடுத்தார்கள். ஆனால், அமைதியாக அதைப் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டனர்.  அவர்கள் கிராம விஜயத்தின் போது ஒரு சிறிய குன்றின்மேல் ஏறப் போவதாகவும், பிறகு கிராமத்தின் முற்போக்கு விவசாயிகளுடன் கருத்து பரிமாரல்கள் செய்யவும் ஏற்பாடாகியுள்ளதாகவும் சுருக்கமாகக் கூறினர். 
 
கரு கிராமத்தை ஒரு அரை மணி அளவில் சென்றடைந்தனர்.  பேரூந்திலிருந்து கீழே இறங்கிய பிரிதிநிதிகளுக்கு தாங்கள் வந்திருக்கும் கிராமம் காலையில் காணொளியில் பார்த்த கிராமமா இதுவென்று தோன்றி, ஒருவரையொருவர் மிக ஆச்சரியத்துடன்  பார்த்தனர். 
 
“சார், இது கரு கிராமம் இல்லையே! நாங்கள் செல்ல வேண்டிய கரு கிராமம் செல்வதற்கு இந்த கிராமம் வழியாகச் செல்ல வேண்டுமோ?” என்று பொருள் பொதிந்த வகையில் வினாவினார் ஒரு பிரிதிநிதி. 
 
“இல்லை சார், இதுதான் நீங்கள் பார்க்கவிருக்கும் கரு கிராமம். நீங்கள் இது பார்ப்பதற்கு பச்சைபசேலென எங்கும் செழுமையுடன் இருப்பதைக் கண்டு உங்களுக்கு சந்தேகம் வந்ததில் ஆச்சரியமில்லை. அதன் ரகசியம் இன்று உங்களுக்குத் தெரிந்துவிடும்.” என்று கூறிக்கொண்டே அவர்களணைவரையும் கிராமத்தில் இருக்கும் ஒரு மலைக்குன்றினருகில் அழைத்துச் சென்றார் அவர்குடன் வந்த அவ்வூரின் விவசாயி.
 
குன்றின் மேல் ஏறும்போது, அவ்விவசாயப் பிரிதிநிதிகள் தங்கள் கிராமத்தின் வளர்ச்சிக்குக் காரணம் குறுகிய ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டம் அமல் படுத்தியதால்தான். என்று விளக்கினர். குன்றின் மேலிருந்து அடிவரை தண்ணீரைத் தேக்கிப் பிடிக்கும் வகையில் குழிகளும், தடுப்புகளும் அமைத்து, அதற்கு தகுந்தாற்போல்.மரங்களும் வளர்திருந்தனர். குன்றில் ஏறி இறங்குவதற்குமுன் வந்த மாநாட்டுப் பிரிதிநிதைகளும் தான் கொண்டிருந்த தண்ணீர் பாட்டிலிருந்த தண்ணீர் முழுவதையும் குடித்துத் தீர்த்து விட்டிருந்தனர். ஆனால், அவர்களுடன் வந்த இரு விவசாய நண்பர்களும் ஒரு மடக்குத் தண்ணீர்கூட குடிக்காமல் விளக்கம் கொடுத்துக்கொண்டே வந்தனர்.   
   
கிராமத்தின் முக்கிய இடங்களிலெல்லாம்  “பிடியுங்கள் ஒவ்வொரு மழைத் துளியையும்” என்று எழுதி மக்களிடம் விழிப்புணர்ச்சியை வளர்த்திருந்தனர். 
 
குன்றிலிருந்து கீழே இறங்கியபின் கிராமத்தின் முற்போக்கு விவசாயிகளிடம் கருத்தாலோசனைக்காக வந்தமர்ந்தனர் மாநாட்டு பிரிதிநிதிகள். 
 
மாநாட்டுப் பிரிதிநிதியொருவர், “அய்யா, உங்கள் கிராம மக்கள் எல்லோரும் ஒன்றுகூடி ஒரு பசுமைப் புரட்சியைச் செய்துள்ளீர்கள் என்றால் அது மிகையாகாது. இந்த கிராமத்திற்கு வருவதற்கு நாங்கள் ஒவ்வொருவரும் பருகுவதற்கு, ஒரு பாட்டில் குடிநீர் கொண்டு வந்தோம். ஆனால், எங்களுடன் வந்த உங்கள் கிராமத்து இரு நண்பர் விவசாயகளும் அதை மறுத்து விட்டார்கள். இங்கு வந்து பார்த்தப் பிறகுதான், எங்களுக்கு அவர்கள் அப்படி மறுத்ததின் காரணத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. உங்கள் கிராமை மற்ற கிராமங்களுக்கும் ஒரு முன்னோடியாக இருக்கும் என்பதில் எங்களுக்கு ஒரு சந்தேகமுமில்லை. மிக்க நன்றி,” கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றனர்.
   
இப்படியாக, உலக மாநாடு பல பொருள் பதிந்த விஷயங்களை மக்களுக்கு விளக்கும் வண்ணமாக இருந்தது. நல்லதாகவே முடிந்தது என்றும் கூறலாம். மாநாடு முடிந்து வெளி நாட்டு பிரமுகர்கள் எல்லோரும் கிளம்பிச் சென்று விட்டனர்.  தொழு நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் திளைத்து இருந்தனர்.
தொழு நாட்டின் ஜனாதிபதி மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தி முடித்ததில் வெளி நாட்டு பிரமுகர்களின் பாராட்டுதல்களைக் கேட்டு மிகவே மகிழ்ந்து போனார். அதைக் கொண்டாடும் வண்ணம் மறு நாள் நாடு தழுவிய விடுமுறையையும் அறிவித்தார்.
***
ஃபிப்ரவரி இரண்டு. இரவு அணுகும் நேரம்.
அன்று இரவு தாக்குதலைத் தொடங்க ஜனாதிபதி வளர்ச்சிவேந்தன் ஆணையிட்டிருந்தார்.
செழு நாட்டின் எல்லையில் ராணுவ வீர்ர்கள் மறைந்திருந்து தாக்குதலுக்குத் தயார் நிலையில் இருந்தனர். விமானப்படை வீர்ர்களும் ஆயத்தமாக தங்கள் பகுதியில் காத்திருந்தனர்.
அன்று இரவு நதியூரைக் கைப்பற்ற செழு நாடு தயார் நிலையில் இருந்தது. தொழு நாட்டு மக்களோ வரும் ஆபத்தைப் பற்றி ஒன்றும் அறியாது, மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, களித்திருந்தனர். அவர்களையும் உறக்கம் மெல்லத் தழுவியது.
செழு நாட்டிலும் மக்களும் நடக்கப் போகும் அதிர்ச்சியான நதியூர் முற்றுகையைப் பற்றி ஒன்றும் அறியாது இருந்தனர். 
 
ஆனால், அன்று இரவு, ஜனாதிபதி வளர்ச்சிவேந்தன், பாதுகாப்பு அமைச்சர், உள்நாட்டு அமைச்சர் மற்றும் சில உயர் அதிகாரிகள் மட்டும் அவரின் அலுவலகத்தில் க்லொஸ்ட் ஸர்க்யுட் டெலிவிஷன்  திரையில் தங்கள் முழு கவனத்தையும் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். 
 
இரவு மெல்ல மெல்ல நதியூரைத் தழுவிக் கொண்டிருந்தது. அன்று முழு நிலவு நாள். ஆனால், நிலவு முழுவதும் வெளி வர முயன்றும், சிறு சிறு மேக கூட்டங்கள் அதை மறைத்துக் கொண்டிருந்தன.  
 
திடீரென்று நதியூரின் அருகில் மின்னல் தாக்கியது போலிருந்தது. வானத்தில் மின்னல் கீற்றுகளாக வெளிச்சத்தை தெளித்துக் கொண்டிருப்பது போலிருந்தது. அதைத் தொடர்ந்து, இடி முழக்கம் போன்ற சப்தங்களும் கேட்டவண்ணம் இருந்தன. அது மின்னல் தாக்குதலா? அது இடி முழக்கமா? ஓன்றும் புரியவில்லை. நதியூர் மக்கள் அதிர்ச்சி கொண்டு தங்கள் வீட்டை விட்டு வெளியே வரத் தொடங்கினார்கள். சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை. தொலைவில் கேட்ட இடி முழக்கம் போன்ற சப்தம் மெல்ல மெல்ல அருகே கேட்பது போலிருந்தது. திடீரென்று, இடி முழக்கம் போன்ற சப்தம் நின்று போய்விட்டது. 
 
ஆனால், நில நடுக்கம் வந்தது போன்று ஒரு பிரமை தோன்றி, மக்கள் வெளியே ஓடி வந்தனர். அது உண்மைதான் என்று மனதில் உறைப்பதற்கு சற்று நேரம் பிடித்தது. மிக பெரிய அளவிலும், மிக வீரியமாகவும், சூறாவளிக் காற்று அடிக்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, மிகக் கனமான மழையும் பெய்யத் தொடங்கியது. 
 
இயற்கை தெய்வம் தன் முழு சீற்றத்தையும் சேர்த்து காண்பிப்பதுபோல், நில நடுக்கம், மழை, இடி, சூறாவளியைவிட வலிமையாக காற்று, இவை அனைத்தையும் கலந்து நதியூரை மெல்ல கவ்விக் கொண்டது.    நதியூரின் முக்கிய நதியில் பாதி கடலில் மூழ்கிவிட்டது.
 
ஜனாதிபதி தீர்க்கதர்சன் தன் தலை நகரிலிருந்து நதியூர் மக்களுக்கு தேவையான பொருட்களை அனுப்பும் முயற்சியில் முழுவதாக ஈடு படுத்திக் கொண்டார். தன் அரசின் முழு கவனத்தையும் நிவாரணப் பணியில் திருப்பி விட்டார். 
 
அப்போது, அவருக்கு ஒரு ரகசிய செய்தி வந்தது. அந்த செய்தியைக் கேட்டு அதிர்ந்து போனார். 
 
“செழு நாடு கட்டி முடித்த நெடுஞ்சாலையின் இருபுறமும், செழு நாட்டு ராணுவ வீரர்களின் ஏராளமான இறந்த உடல்கள் கிடப்பதாகவும். சில ராணுவ வீரர்களின் உடல்கள் நதியூரின் அருகில் வரைக் கிடப்பதாகவும் வந்த செய்திதான்.”  
 
“இது எப்படி சாத்தியமாகும்?” என்று சற்று சிந்தனையில் ஆழ்ந்தார். அவர் உள்நாட்டு அமைச்சர் அவரிடம் வந்து, செழு நாட்டின், தீய எண்ணத்துடன் தீட்டியத் திட்ட்த்தைப் பற்றி ஒற்றர்கள் மூலம் தகவல் வந்ததென்றுக் கூறினார். மேலும், செழு நாட்டின் தலைநகரமான கடலூரின் பெரும்பகுதியும், தொழு நாட்டின் நதியூரின் சில பகுதிகளும் இந்த இயற்கையின் விளையாட்டில் திக்கி, கிட்டத்தட்ட கடலில் மூழ்கி விட்டாதாகவும் கூறினார். 
 
தீர்க்கதர்சன், தான் தொழு நாட்டு சூழ்ச்சி வலையில் சிக்கி விட்ட்தை எண்ணி மிகவும் வருந்தினார்.
   
 
****
“அய்யகோ! எல்லாம் போயிற்றே!” எங்கே, என் செழு நாடு. நான் எங்கே இருக்கிறேன்? ஒன்றும் புரியவில்லையே,” வளர்ச்சிவேந்தனின் குரல் தழுதழுத்தது. டெலிவிஷன்  திரை திடீரென்று அணைந்து விட்டது. எங்கும் இருட்டு. வெளியே செல்ல வழி காண்பிக்கக் கூட விளக்கு வெளிச்சம் இல்லை. மொபைலில் உள்ள விளக்கின் வெளிச்சத்தின் உதவி கொண்டு தன் அறையை விட்டு வெளி வர முயன்றார். பயனில்லை.    
அமைச்சர்களும், அதிகாரிகளும் அவருக்கு உதவ முயற்சித்தனர். முயற்சி பயனளிக்க வில்லை.
அன்று இரவு ஒரு பெரிய சுனாமியைப் போல் மும்மடங்கு வேகத்தில் காற்றும் மழையும் அடித்து நாட்டையே கடல் கொண்டு விட்டது போல் இருந்தது. இரவு முழுவதும், எங்கும் அழு குரல்கள்தான் கேட்டன. இனி, நம் நாட்டில்  சூரியன் உதிப்பானா என்று சந்தேகமே வந்து விட்டது செழு நாட்டு மக்களுக்கு. மழை பெய்யவில்லையே என்று ஏங்கியிருந்த காலம் போக, இனி மழையே வேண்டாம் என்று தோன்றும் வண்ணம் இயற்கையின் கோபத்திற்கு ஆளாகி எங்கு இருக்கிறோம் என்றுகூட தெரியாத நிலையில் அவர்கள் இருந்தனர்.  உயிர் சேதமும் பொருள் சேதமும் கணக்கெடுக்க முடியாத அளவிற்கு அழிந்து விட்டது செழு நாடு.  
ஜனாதிபதி அலுவலகம் இருந்த மாளிகையை மெல்ல மெல்ல கடல் தண்ணீர் சூழ ஆரம்பித்தது. கடலூர் முழுவதும் கடல் நீர் சூழ்ந்து கொண்டது. காலை விடிவதற்குள், கடலூரின் முக்கியப் பகுதிகளும், ஜனாதிபதியின் அலுவலகமும், அவர் தங்கியிருந்த பெரு மாளிகையும் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. மெல்ல மெல்ல மழையின் வீரியமும், சூறாவளிக் காற்றின் வேகமும் குறையத் தொடங்கின. ஜனாதிபதி வளர்ச்சிவேந்தனும் அவர் அமைச்சர்களும் மற்றும் அவருடன் இருந்த உயர் அதிகாரிகள் பலரும் கடலில் மூழ்கி விட்டனர்.
சூரியனும் மெல்ல வெளியே வர முயற்சி செய்வதுபோல் இருந்தது.  மக்கள் கடலை நோக்கி பார்த்தார்கள். இயற்கையின் சீற்றத்தின் சாபம் போல் செழு நாடு துண்டு துண்டாக ஆகி விட்டது. எங்கு பார்த்தாலும் கீழே சாய்ந்த பெரிய பெரிய கட்டடங்களும், மனிதர் மற்றும் விலங்குகளின் இறந்த உடல்களும்தான்.  அப்பப்பா! பார்ப்பதற்கே திராணியில்லாமல் இயற்கையின் சீற்றத்தின் விளைவுகளைத்தான் பார்க்க முடிந்தது. செழு நாடு எங்கே? அப்படி ஒரு நாடு இருந்ததா என்ற சந்தேகம் வரும் நிலையில் உருக்குலைந்து தெரிந்தது.

***
இடம்: தேவலோகம்.
முதற் கடவுள் இயற்கைக் கடவுளை உடனே வருமாறு விளித்தார்.
இயற்கைக் கடவுள் வந்தார். முதற் கடவுள் அவர் முன் செழு நாடு மற்றும் தொழு நாட்டிற்கு ஏற்பட்ட அழிவிற்கு காரணத்தைக் கேட்டார்.
இயற்கைக் கடவுளுக்கு, முதற் கடவுள் தன்னை அழைத்ததின் நோக்கத்தைக் கேட்டு சற்று நகையுடன் கூடிய சிரிப்பு வந்தது.
“காரணம் சொல்கிறேன். நான் அழிக்கும் கடவுள் இல்லை. நான் வரப்பிரசாதமான தண்ணீரை நல்ல விதமாக எல்லோருக்கும் பயன் படும் எண்ணத்தோடுதான்  இரு நாடுகளுக்கும் உபயோகப்படும் வகையில் பரிசாகக் கொடுத்தேன். ஆனால் நடந்தது என்னவென்று தங்களுக்கே தெரியும். இந்த மிக உயர்ந்த பரிசின் மதிப்பை அறியாது, மற்ற எவரொருவரும் உபயோகிக்கக் கூடாதென்று, தன் வசமே வைத்துக் கொள்ளும் பேராசைக்காரர்களாகி விட்டார்கள்.  இரு நாடுகளும், தன் சுய நலம் கருதி  கண் மூடித்தனமாக இயற்கை கொடுத்த பரிசான உயிருக்கும் உயிரான தண்ணீரை எல்லா மக்களின் நலனுக்காகவும் பயன் படுத்தத் தவறி விட்டார்கள். இந்த உயிர் கொடுக்கும் குடி நீரை தன் வசப்படுத்திக் கொள்ள என்னவென்ன  யுக்திகளைக் கையாண்டார்கள். ஒரு கூட்டம் வஞ்சம் மற்றும் வக்கிரமான எண்ணத்துடன் தன் அண்டை நாட்டில் ஓடும் நதியையே தன் வசப்படுத்திக் கொள்வதில் கவனமாக இருந்தனர். மற்றொரு கூட்டமும் அதே நதியை தன் வசத்திலேயே இருத்திக் கொள்ள எல்லா முயற்சிகளையும் தொடர்ந்து செய்த வண்ணமிருந்தனர். முடிவில், நான் கொடுத்த பரிசு குரங்குகளின் கைகளில் கொடுத்த பூமாலையைப் போல் அழிந்து போய் விட்டது, ஆகவேதான்,  நான் கொடுத்த பரிசான நதியூரின் முக்கிய நதியின் பெரும் பகுதியை என்னுடன் திரும்ப எடுத்துச் சென்று விட்டேன்.” ஒரே மூச்சில் இயற்கை கடவுள் தன் விளக்கத்தைக் கூறி முடித்தார்.
“அழிவு வேலைகளை விட ஆக்க வேலைகளுக்கு இயற்கையின் வரப்பிரசாதங்களைப் பயன் படுத்த வேண்டும் என்ற நல்ல விளக்கம் தந்தீர்கள்,” என்று கூறினார் முதல் கடவுள்.   


  




No comments:

Post a Comment