நிர்பயா
மரணம் அடைந்து மூன்று வருடங்கள் ஆகி விட்டன. அவளைக் கொலைக்குக் காரணமான ஆறு பேர்களில் ஒருவன் தற்கொலை
செய்து கொண்டான். நால்வருக்கு தூக்கு தண்டனை அளிக்கப் பட்டுள்ளது. ஒருவன் வயது ரீதியாக
அப்போது ஒரு 'மைனர்'. ஆகவே, அவனுக்கு அளிக்கப் பட்ட மூன்று கால சிறை தண்டனை டிசம்பர்
20ஆம் தேதி முடிவடைகிறது.
அவனுக்கு
விடுதலை கொடுக்கக் கூடாது, அவனுக்கும் தூக்கு அல்லது குறைந்த பட்சமாக ஆயுள் தண்டனையாவது
கொடுக்க வேண்டும் என்று வாதங்கள் தினந்தோறும் நாட்டின் முக்கிய டீ.வீ சானல்களில் ஒளி
பரப்பாகிக் கொண்டிருக்கின்றன. இதைத்தவிர, 'ஃபேஸ்புக்', 'ட்வீட்டர்' என்ற வலைத்தலங்களும்
இவ்விஷயத்தை விமர்சித்த வண்ணமிருந்தன. ஒருவராவது, அந்த மைனர் இளைஞனின் பக்கம் பேசத்
தயாராகவில்லை. அவ்வளவு தூரம் நிர்பயா மரணம் மக்களின் மத்தியில் பேசப்படும் செய்தியாக
இந்த மூன்று ஆண்டுகளும் இருந்து வந்துள்ளதென்றால் அது மிகையாகாது.
நான்
'கூகுல்' செய்து பார்த்ததில், முதல் வருடம், சம்பவம் நடந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள்
வரை இதைப் பற்றி நாட்டின் முக்கிய டீ.வீ சானல்களில் தீவிர விவாதம் நடை பெற்றது. பிறகு,
ஒரே அமைதி. திரும்பவும் முதல் வருடம் முடிந்தவுடன், இரண்டு மூன்று நாட்களுக்கு அதைப்
பற்றி விவாதம். திரும்பவும் அமைதி. அதே போன்று, இரண்டாம் வருடம் முடிந்த போதும், அவ்வாறே விவாதங்கள்.
திரும்பவும் அமைதி. இப்போது, மூன்றாம் ஆண்டு முடிந்து, கொலை செய்த ஒருவரில் 'மைனர்'
என்ற காரணத்தினால், சட்ட ரீதியாக காவலில் வைக்கமுடியாத கட்டத்தில், இந்த செய்தி, நாடு
முழுவதும் திரும்பவும் சூடு பிடித்துப் பேசப்படுகிறது. ஆங்கில டீ.வீ சானல்களின் அர்னாப்
கோஸ்வாமியென்ன, ஸர்தேஸாயென்ன, இவ்விஷயத்தை அலசு அலசென்று அலசித் தீர்த்துக் கொண்டிருந்தனர்.
நிர்பயாவின் பெற்றோர்களும், தன் பெண்ணுக்கு நடந்த இழிச் சம்பவத்திற்கு, மைனர் இளைஞனுக்கும்
மரண தண்டனையளிக்க வேண்டுமென்று மிகத் தீவிரமாக இருக்கின்றனர். இந்நிலையில், அந்த இளைஞனின்
பெற்றோரைப் பற்றி ஒரு விவாதமும் இல்லை.
ஒரு தினசரி, சிறார் குற்றம் (juvenile crime) பற்றி தரும் தகவல் படி, 2014ம் வருடத்தில், கிட்டத்தட்ட 10.6% வழக்குகள் கற்பழிப்பு மற்றும் பெண்களை அவமானப்படுத்திய காரணங்களுக்காக இருந்தன. அவைகளைச் செய்த சிறுவர்களுக்குக் கொடுத்த தண்டனைகள், மன்னிப்பு, எச்சரிக்கை, சில காலங்கள் மறுவாழ்வு மையங்களில் தங்குதல் போன்றுதான் இருந்தன என்று கூறியுள்ளது. ஆகவே, இதுவரை இவ்விதமான குற்றங்களைச் செய்துவிட்டு, வெளியே வந்துவிட்ட இளைஞர்களைப் பற்றி இப்படி மிகத் தீவிரமான விவாதம் நடந்ததா என்றால், இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.
நான் இப்படியெல்லாம் கூறுவதால், அவ்விளைஞனின் இக்கொடூரமான செயலுக்கு ஒப்புதல் தருவதாக நினைக்க வேண்டாம். நான் இவ்விஷயத்தை சற்று மாற்றுக் கோணத்தில் கற்பனை செய்தேன். உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இது என் சொந்த கற்பனைதான்.
*********
20 டிசம்பர், 2015
இளைஞன்,
உன்மாதன் (கற்பனை பெயர்தான்) திஹார் சிறையிலிருந்து மிக பாதுகாப்புடன் வெளியே கொண்டு
வரப்பட்டான். அவன் முகம் வெளியே இருப்பவர்களுக்குத் தெரியாத வண்ணமும், ஆனால், அவனால்
மற்றவர்களைப் பார்க்க முடியும் வண்ணமும் ஒரு துணியால் மூடியிருந்தது. அவனைச் சுற்றி பலத்த போலிஸ் பாதுகாப்பு இருந்தது.
சிறையின்
வெளியில், ஒரு பெரிய மக்கள் கூட்டமே அவன் வெளியே வருவதை ஆவலுடன் பார்க்கக் காத்திருந்தன.
நிறைய மனிதர்கள், அவனை வெளியே விடக்கூடாது என்றும், ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டுமென்றும்
குரல் எழுப்பிக் கொண்டுமிருந்தனர். அவர்களைத் தவிர, நாட்டின் முக்கிய டீ.வீ சானல்களிலிருந்தும்
தங்கள் தங்கள் வீடியோ காமராக்களை தயாராக வைத்துக் கொண்டும் காத்திருந்தனர்.
அப்போது, கூட்டத்திலிருந்து, ஒரு நடுத்தர வயதுள்ள ஆணும், பெண்ணும் திடீரென்று வெளி வந்து, உரத்த குரலில், 'உன்மாதா' என்று கத்திக் கொண்டே அவனை நோக்கி விரைந்தனர். குரல் வந்த திசையில் அந்த இளைஞனும் திரும்பினான். அங்கு கூடியிருந்த மக்களுக்கும், டீ.வீ பத்திரிகையாளர்களுக்கும் இதைப் பார்த்தவுடன் மிக ஆச்சரியத்தைத் தந்தது. இதுவரை, உலகத்திற்கே தெரியாத உண்மை- அவ்விளைஞன் யார், அவன் பெயர் என்ன, அவன் குடும்பத்தார்கள் யார் யார் என்ற உண்மை- திடீரென்று தெரியவந்து விட்டதாக எண்ணினர். அவ்விளைஞனும், அவ்விருவரையும் பார்த்து, 'அம்மா, அப்பா'' என்று உரக்க பதில் குரல் கொடுத்தான். ஒரு சில நிமிடங்கள் அங்கே ஒரு எதிர்பாராத அமைதி நிலவியது.
அவ்விருவர்களையும்
காவல் அதிகாரிகள் முன்னேற விடாது, தடுத்து நிறுத்தினர். அவ்விருவர்களும், தடாலென்று,
அவர்களின் காலில் விழுந்து வணங்கினர். அவர்களை தங்கள் மகனுடன் சற்று பேச அனுமதிக்குமாறு
கெஞ்சினர். காவல் அதிகாரிகளுக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. இதைப் பார்த்துவிட்டு
தொலைவிலிருந்து ஒரு மேலதிகாரி வேகமாகவே ஒடி வந்தார். அந்த தம்பதிகளைப் பார்த்து, அவர்களை
அவ்விளஞனைப் பார்க்க அனுமதியளிக்க முடியாதென்று கூறினார். அவர்கள், திரும்பவும் அந்த
மேலதிகாரி கால்களில் விழுந்து அவர்களை ஒரு சில நிமிடங்களே தங்கள் மகனுடன் பேச அனுமதி
அளிக்குமாறு கெஞ்சினார்கள். அந்த அதிகாரிக்கும் ஒரு தர்ம சங்கட நிலையாகி விட்டது.
'சரி,
உங்களிருவருக்கும் சில நிமிடங்களே கொடுப்பேன். எங்கள் முன்னிலையில்தான் சந்திக்க வேண்டும்,
பேசவும் வேண்டும்,' என்று கூறி, அவர்களைத்தானே அழைத்துச் சென்று, அவ்விளைஞனின் முன்னிலையில்
நிறுத்தினார்.
அவர்கள்
இருவரும் அந்த அதிகாரி சொன்னதற்கு சம்மதித்து, தங்கள் மகன் இருந்த திசையை நோக்கி அவருடன்
துரிதமாக நடக்கத் தொடங்கினர்.
மகனின்
கைகளைப் பற்றிக் கொண்டு, அவ்விருவரும் அழுது கொண்டே அவனிடம் பேசத்தொடங்கினர். அவன்
முகத்தைத் தடவிக் கொடுத்தனர். அவனும், அவ்விருவரையும் அணைத்துக் கொண்டான். அவனும் அழுகிறான்
என்று அங்கு நடக்கும் சம்பவத்திலிருந்து எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்தது. டீ.வீ பத்திரிகையாளர்களுக்கு
உள்ளூர மிக மகிழ்ச்சிதான். இது போன்ற சம்பவம், நேரிடை காட்சியாக ஒளி பரப்பப் படுவதால்
அவர்களின் 'டி.ஆர்.பி ரேடிங்க்' மிக அதிகமாகிவிடும் என்று எண்ணி மிக மகிழ்ந்தார்கள்.
மகனும்,
பெற்றோரும் ஒருமித்து இருக்கும் காட்சி, முதன் முதலாக நேரடி ஒளிபரப்பாகிக் கொன்டிருந்தது.
நொடிகள்,
வினாடிகளாயின. காவல் மேலதிகாரி, பொறுமையிழந்தார்.
'சில
நிமிடங்களென்று கூறி, பதினைந்து நிமிடங்கள் ஆகி விட்டன. அவ்வளவுதான். நீங்கள் கிளம்புங்கள்,'
என்று கூறி, அவர்களின் கைகளைப் பற்றி அவ்விடத்திலிருந்து
உடனே விலகுமாறு உத்தரவிட்டார்.
அவர்கள்,
'ஐயா, கடைசி ஒரே நிமிடம், நாங்கள் போய்விடுகிறோம்,' என்று கூறிவிட்டு, அவனிடம், 'டேய்,
இன்று, ஞாயிற்றுக்கிழமை. உனக்குப் பிடிக்குமென்று, பால் பாயாசம் கொண்டு வந்திருக்கிறோம்.
அதை இப்போதே குடித்து விடு என்று கூறி, ஒரு ஃப்ளாஸ்கிலிருந்து தாங்கள் கொண்டு வந்திருந்த
பாயசயத்தை அவனிடம் கொடுத்துக் குடிக்கச் சொன்னார்கள். அவனும், மிக ஆர்வத்துடன், அந்த
ஃப்ளாஸ்கிலிருந்து பாயசத்தைக் குடித்துவிட்டு, அவர்களை திரும்பவும் ஒரு முறை அன்புடன்
தழுவிக்கொண்டான். பிறகு, ஃப்ளாஸ்கை அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு, 'சீக்கிரமே,
திரும்பி வந்து விடுவேன்' என்று கூறிவிட்டு, காவல் அதிகாரிகளுடன் விரைந்தான்.
பார்க்க
வந்த கூட்டத்திற்கும். டீ.வீ பத்திரிகையாளர்களுக்கும் ஒரே மகிழ்ச்சி. சில டீ.வீ பத்திரிகையாளர்கள்
அந்த தம்பதியை நோக்கி விரைந்து வந்து அவர்களிடம் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினர்.
அவ்விருவரும், தாங்கள் ஒருவரிடமும் பேசத் தயாராக வரவில்லை என்று கூறிவிட்டு, அங்கிருந்து
விரைந்தனர். வெளியே காத்திருந்த ஆட்டோவில் ஏறி அங்கிருந்து வினாடியாக மறைந்தனர். சில
டீ.வீ பத்திரிகையாளர்கள் அவர்களைத் தொடர்ந்து சென்றனர். ஆனால், ஒரு பயனுமில்லாது, திரும்பி
வந்து விட்டனர். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? எங்கே போகிறார்கள்? என்று புரியுமுன்மே,
அவர்கள் மாயமாய் மறைந்து விட்டனர்.
******
ஒரு ஃப்லாஷ்
பேக்.
நிர்பயா
சம்பவத்திற்கு ஒரு வருடம் முன்பு ஒரு நாள்.
பீஹார்
மாநிலத்தில் ஒரு கிராமம்.
உன்மாதன்,
தன் அம்மா, மாகியிடம் சண்டைப் போட்டுக்கொண்டு கோபம் உச்சியை அடைய, கையில் இருந்த சாப்பாட்டுத்
தட்டை வீசியெறிந்து வெளியேறினான்.
அவன்
செலவிற்கு, ரூபாய் நூறு கேட்டான். கையில் பணமில்லையென்று, அவன் அம்மா சொல்ல, கோபம்
கொண்டு அவன் வீட்டை விட்டுப் போனான்.
இப்படி
அவன் அடிக்கடி நடந்து கொள்வதால், இன்றும், அவன் கோபப்பட்டுக்கொண்டு வெளியே சென்றதைப்
பற்றி அவர்கள் ஒன்றும் கவலையடையவில்லை. அவர்களுக்கு
இது மிகச் சாதரண நிகழ்ச்சியாகத்தான் இருந்தது.
சிறு
வயதில், உன்மாதன் அன்புடனும் படிப்பில் ஆவலுடனும்தான் இருந்தான். பள்ளிக்குக் கிளம்பும் முன்னும், அவன் அம்மாவினருகில்
வந்து, அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு, 'அம்மா, மருந்தைச் சாப்பிட மறந்துடாதே. இன்னும்
மூன்று கீமீயோதான் பாக்கியுள்ளது. அதற்குப் பிறகு உன் உடம்பு சரியாகிவிடும், கவலைப்படாதே,
என்று ஆறுதல் கூற மறக்கமாட்டான்.
அவளும்,
ஞாயிற்றுக் கிழமை தவறாது, அவனுக்குப் பிடிக்குமென்று, பால் பாயாசம் செய்து கொடுப்பாள். பால் பாயசம் இருந்தால், அன்று மற்ற உணவு வகைகள்
இரண்டாம் பட்சம்தான். அவனும் அவர்களின் ஒரே பிள்ளை. அவர்களின் ஒரே நம்பிக்கை.
ராமன்
பான்டே, அவனின் அப்பா. ஒரு தனியார் தொழிலகத்தில் செக்யூரிட்டியாக வேலை. மாதத்தில் பல
நாட்களுக்கு இரவு ட்யூடி பார்க்க வேண்டியிருந்தது. ராமன் பான்டேயின் வருமானம் வீட்டு செலவிற்கு ஒதுக்கியது
போக, உன்மாதனின் படிப்பு, மற்றும் இதர செலவிற்கும் போதும் போதாது போல் இருக்கும். இதற்கிடையில்,
அம்மா மாகியின் கான்ஸர் ட்ரீட்மெண்ட்க்கும் பணம் வேண்டியிருந்தது. இந்த நிலையில் செலவை எவ்வளவு சிக்கனப் படுத்தமுடியுமோ அவ்வளவு
முயன்று சிக்கனமாக வாழ்ந்தனர்.
கடந்த
ஒரு வருடமாக, உன்மாதனின் போக்கு, அவர்களுக்குக் கவலையைக் கொடுத்தது. நண்பர்கள் சகவாசம்
சரியில்லை. அதனால், அவர்கள் அக்கிராமத்தை விட்டே சென்று விடலாமென்று தீர்மானித்திருந்தனர்.
அன்று,
உன்மாதன் கோபம் கொண்டு வெளியே சென்றபின், மாகி, அதை அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை.
'என்ன,
இன்று நேரம் மிக மெதுவாகவே போகிறது போலுள்ளது. வீட்டு வேலைகள் துரிதமாகவே முடிந்து
விட்டன, வீட்டில் ஒரு குளுமையான காற்று அடித்து நின்றது போலவும், பிறகு ஒரு கனமான வெப்பக்
காற்று மாறி அடித்தது போலவும் இருந்தது'.
மாகி
எண்ணங்கள் சற்றுத் தடுமாற தரையில் அமர்ந்தாள். அவள் முகத்தில் ஒரு களைப்பு தெரிந்தது.
இரவு
மெதுவாக அந்த கிராமத்தைத் தழுவியது.
இரவு
ஒன்பது மணி.
இன்னும்
உன்மாதன் வீடு திரும்பவில்லை.
கடைசியாக
அவன் மொபையிலிலிருந்து ஏழு மணியளவில் ஒரு கால் வந்தது. அதன் பிறகு, நெட்வொர்க் இல்லை
என்ற பதில் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. ராமன் தன் இரவு வேலைக்குச் சென்றிருந்தான். மாகிக்கு
இது போன்று சில நாட்கள் தன் மகன் நேரம் கழித்து வந்திருக்கிறானென்பதால், முதலில் அதிக
கவலைப் படவில்லை. ஆனால், நேரம் செல்லச் செல்ல சற்று பயம் வந்தது. அருகில் இருக்கும்
பஸ் ஸ்டாப்பிற்குச் சென்று அவன் வருவான் என்று எதிர்பார்த்து காத்திருந்தாள். அவன்
வரும் எந்த அறிகுறியும் தெரியவில்லை. கவலைதான் அதிகரித்தது.
ராமனுக்கு
ஒரு போன் செய்து தன் கவலையைத் தெரிவித்தாள். அவனும் இதுபோல் சில சமயங்களில் ஆகிவுள்ளதால்,
மனைவி மாகிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு தன் வேலையில் ஆழ்ந்தான். அருகிலிருக்கும் போலீஸ்
ஸ்டேஷனுக்குச் சென்று விசாரிக்க விரைந்தாள். ஆனால் ஏனோ, மனம் மாறி வீட்டிற்கே திரும்பி
வந்து விட்டாள்.
இரவு
மணி பதினொன்று.
உன்மாதனைப்
பற்றி ஒரு செய்தியுமில்லை. இரவுதான் அவளின்
ஒரே துணையாக இருந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை.. திரும்பவும் கணவனுக்கு போன்
செய்து தன் கவலையைத் தெரிவித்தாள். அவன் திரும்பவும் தன் மனைவிற்கு ஆறுதல் கூறிவிட்டு
வேறொன்றும் செய்வதறியாது பேச்சைக் கட் செய்தான்.
இரவு
முழுவதும் தூக்கமின்றி சோர்வு ஒரு புறம். அவள் உடம்பின் உபாதை மற்றொரு புறம். மாகிக்குக் கவலைதான் அதிகரித்தது.
ராமன், அடுத்த நாள் காலை எட்டு மணிக்குப் பிறகு வருபவன்,
அன்று நான்கு மணிக்கே வந்து விட்டான்.
உன்மாதன்
இன்னும் வீடு திரும்பவில்லை. அவனைப்பற்றி ஒரு தகவலும் இல்லை. யாரிடம் சொல்வது, என்ன
சொல்வது என்று புரியாது, அவர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்தனர்.
ஒரு மாதம்
கழித்து, அவர்களுக்கு ஒரு கடிதம் வந்தது, உன்மாதன், டில்லி வந்துவிட்டேனென்றும், அங்கேயே
வேலை தேடிக் கொண்டுவிட்டதாகவும் எழுதியிருந்தான். அவர்கள் என்ன செய்வதென்று புரியாது,
தங்கள் விதியை நொந்து தன் வாழ்க்கையைத் தொடர்ந்தனர்.
இப்போதெல்லாம்,
மாகி மற்றும், ராமனுக்கு வீட்டு வேலைகள் முடிந்து ஒரே பொழுதுபோக்கு, டீ.வீயில் வரும்
நாடகங்களைப் பார்ப்பதும், செய்திகளைப் பார்ப்பதுமாக ஆகிவிட்டது.
அப்படியிருக்கும்
ஒரு நாள்தான், நிர்பயா கொலையைப்பற்றி டீ.வீயில் செய்தியைக் கேட்டார்கள். அவர்களும்,
அச்செய்தியைப் பார்த்த மற்றவர்கள் போல், அந்த அபலைப் பெண்ணுக்காக வருந்தினர்.
திடீரென்று,
ஒரு நாள் இரு காவல் அதிகாரிகள் அவர்கள் வீட்டின்
முன் வந்து, உன்மாதனைப் பற்றியும், அவர்களின் உறவு பற்றியும் விசாரித்தனர். அவர்களுக்கு,
தன் உயிரே தங்களிடமிருந்து சென்றது போலிருந்தது. வந்த அதிகாரிகள், உன்மாதன் பிறப்பு
சான்றிதழ் நகல், அவன் படித்த பள்ளி, படித்த வகுப்பு என்று தங்களுக்கு வேண்டிய பத்திரங்களைப்
பெற்றுக் கொண்டு சென்றனர்.
அன்றுமுதல்,
அவர்கள், தங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்வதையும் குறைத்துக் கொண்டனர். டீ.வீ ஒன்றுதான் அவர்களுக்குத்
துணையாக இருந்தது. அதில் நிர்பயாவின் மரணத்தைப்பற்றியும், அவளுக்கு இழைக்கப் பட்ட கொடுமைகளும்,
தங்கள் மகன் உன்மாதனின் பங்கும் கேட்கக்கேட்க அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது, மேலும்,
தங்களைப் பற்றிய தாழ்வு எண்ணமும் அதிகரிக்கத் தொடங்கியது.
அப்போது,
உன்மாதனுக்கு, அவன் மைனர் என்ற காரணத்தினால், தூக்கு தண்டனையிலிருந்து தப்பிக்க முடிந்தது
என்ற செய்தி கேட்டு சற்று கவலை குறைந்தவர்களானார்கள்.
அவன்
சிறைக்குச் சென்றபின், அவனைச் சென்று இரண்டு மூன்று முறைகள் பார்த்து வந்தனர். அவன்
அவர்களைப் பார்த்து தான் செய்த கொடூரமான செயலுக்கு வருந்தியதாக ஒருபோதும் காட்டிக்
கொள்ளவில்லை.
அதே சமயம்,
நிர்பயாவின் பெற்றோரும், மற்றவர்களும், உன்மாதனுக்குக் குறைந்த பட்சமாக ஆயுள் தண்டனையாவது
கிடைக்கவேண்டுமென்று கூறிக் கொண்டேயிருந்தனர்.
திரும்பத்
திரும்ப இவ்வித விவாதங்களைக் கேட்கக்கேட்க, அவர்களுக்கும், தங்கள் மகனாகவிருந்தாலும்,
உன்மாதன் இனி சாதாரண மனிதனாக வெளியே வாழ முடியாது என்று ஆழமாகத் தோன்றத் துடங்கியது.
அவன் வெளியே வந்தால், அவன் நல்ல மனிதனாக மாறி வாழுவான் என்ற நம்பிக்கையும் குறைந்து
வந்தது. மாகியும்,
ராமனும்,
தங்கள் மகன் உன்மாதனினால், ஒரு நல்ல குடும்பமே சீர் குலைந்து விட்டது; இனி வாழ்வதில் ஒரு அர்த்தமுமில்லை என்று நம்பத்தொடங்கினர்.
இப்படியே,
மூன்றாண்டுகள் முடியும் சமயமும் வந்தது. உன்மாதன், சிறையிலிருந்து திரும்பி வந்தால்,
இக்கிராமத்தில் ஒருவரும் அவனுக்கு தங்களுடன் தங்க அனுமதி கொடுக்க மாட்டார்கள். தங்களுக்கும்
இனி வாழ்க்கையென்று ஒன்றுமில்லை என்றும் ஆழமாக எண்ணத்தொடங்கினர்.
ஒரு தீர்மானத்துடன்,
அவர்கள் உன்மாதன் விடுதலை நாளை எதிர் நோக்கிக் காத்திருந்தனர்.
*****
இனி நம்
கதைக்கு வருவோம்.
உன்மாதனை
ஏற்றிச் சென்ற காவல் நிலய ஊர்தியில், உன்மாதன் சற்று மயக்க நிலையில் இருந்தான். உட்கார்ந்த
இடத்திலேயே தலை சாய்ந்துவிட்டான். காவல் அதிகாரிகளுக்குக் கவலை உண்டாயிற்று. அவனை உடனே,
அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவனை அங்கே பரிசோதித்ததில்,
அவன் ஒரு அரை மணி நேரம் முன்பே இறந்து விட்டதாகவும், அவன் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு
அனுப்பும் படியும் மூத்த மருத்துவர் ஆணையிட்டார். காவல் அதிகாரிகளுக்கு ஒன்றும் புரியவில்லை.
என்ன செய்வதென்றும் தெரியவில்லை.
ஒரு ஐந்து
- ஆறு கிலோமீட்டர் தொலைவில், மாகியும், ராமனும் சென்ற ஆட்டோ ஓட்டுனருக்கு, ஏதோ சந்தேகம்
தோன்ற, சற்றே தலையைத் திருப்பி பார்த்தார். பின்னே அமர்ந்திருந்த இருவரும், ஒருவர்
மேல் ஒருவர் சாய்ந்து கொண்டு ஒரு உணர்வுமில்லாதது போல் இருந்தனர். ஓட்டுனர், ஆட்டோவை சற்றே ஓரமாக நிறுத்திவிட்டு,
அவர்களை எழுப்ப முயற்சித்தார். ஒரு பயனுமில்லாமல், ஆட்டோவை அருகிலிருந்த மருத்துவமனைக்கு
ஓட்டிச் சென்றார். அங்கே அவர்களைப் பரிசோதித்த மருத்துவர், அவர்களிருவரும் கிட்டத்தட்ட
ஒரே சமயத்தில் உயிர் இழந்துவிட்டிருக்கிறார்கள் என்று கூறி, காவல் நிலையத்திற்குத்
தெரிவிக்குமாறும் கூறி விட்டு சென்றார்.
இந்த
செய்தி, காட்டுத்தீ போல், டீ.வீ சானல்களில் ஒரு மணி நேரத்திற்குள் ஒளி பரப்பாகத் தொடங்கியது.
நிர்பயாவின்
பெற்றோர் இந்த செய்தியைப் பார்த்துவிட்டு, அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். உன்மாதனுக்கு அதிக
தண்டனை கிடைக்க வேண்டுமென்று தாங்கள் எதிர்பார்த்ததற்கு பதில், அந்த பொல்லாத மகனின்
பெற்றோர்களின் உயிர்களையும் எடுத்துச் சென்று விட்டானே என்று வருந்தத் தொடங்கினர்.
டீ.வீ.
சானல்கள் இந்த விஷயத்தை வைத்துக்கொண்டு, இன்னும் ஒரு வாரம் ஓட்டி விடலாமென்று புது
உணர்வுடன் தங்கள் முயற்சியில் ஈடுபட்டனர்.
அரசியல்வாதிகள்
இனி பெண்கள் பாலியல் தாக்குதலால் படும் தொல்லைகளைப் பற்றி சற்று கவலைப் படாமல் இருக்கலாமென்று
பெருமூச்சு விட்டனர்.
******
கதை மிகவும் நன்றாக இருக்கு..ஆனால் முடிவு முன்பே ஊகிக்க முடிகிறது.
ReplyDelete