Sunday 20 January 2019

என் மராத்தான்



குழந்தையை விட வேக நடை இல்லை
நடப்பதற்கு நண்பன் ஒரு நடை கழி
உடம்பு தளர்ச்சி, வயது முதிர்ச்சி, வியாதி
என்ன இல்லை !
நடையை வேகப் படுத்துகிறேன்; அது ஒரு முயற்சிதான்.
காற்று இல்லை--அசைவற்ற மரங்களும், செடிகளும் என் நடையை பார்த்து இவன் ஒரு நடை மரமா---என எண்ணுகின்றனவோ !
****
சற்று தொலைவில் தரையில்  கருப்பு பள்ளம் போன்ற ஒன்று தெரிகிறது.
கவனமாக அந்த இடத்தை தாண்டி நடக்கிறேன்
இரண்டு மூன்று அடி நடந்திருப்பேன்
சற்று காற்றும் வீச தொடங்கியது
ஒரு கருப்பு கயிறு என்னை உரசிவிட்டு காற்றில் மிதந்து சென்றது.
திரும்பி பார்த்தேன்; அங்கே கருப்பு பள்ளம் தெரியவில்லை.
சிரிப்பு வருகிறது –
ஒரு சிறு கயிறுகூட என்னை விட வேகமாக செல்கிறதே என்று!
கண்ணீர் வருகிறது –
குழந்தையை விட குழந்தையாகி விட்டேனோ
****
குழந்தையை விட வேக நடை இல்லை
நடப்பதற்கு நண்பன் ஒரு நடை கழி
உடம்பு தளர்ச்சி, வயது முதிர்ச்சி, வியாதி
இதுதான் உண்மை….உணர்கிறேன்…..
 நண்பன் நடை கழியுடன் அடுத்த அடியை எடுத்து வைக்கிறேன்.
இதுவே எனக்கு ஒரு மராத்தான்.