Monday 30 October 2017

இது ஒரு குறிஞ்சி மலரின் உண்மைக் கதை

                               

இது ஒரு குறிஞ்சி மலரின் உண்மைக் கதை           
முதலில், நம் புராணத்தைப் பார்ப்போம்.
‘ஷாஷ்டி தேவி’ என்றும் ‘தேவ சேனா’ என்றும் அழைக்கப் படும் இவர்,  திருமணமான பெண்களால் வணங்கப்படும் கடவுள்களில் மிக முக்கியமான கடவுள்.  இக் கடவுள் திருமணமான பெண்களுக்குக் குழந்தை வரம் கொடுப்பவர்; பிறந்த குழந்தையைக் காப்பாற்றுபவர் என்றும் நம்பிக்கை.  இவர் தங்க மயமான நிறத்துடனும், கைகளில் குழந்தைகளை அணைத்தவாறு பூனை மீது சவாரி செய்தும் காட்சியளிப்பார்.  வருடத்தில் ஆறு முறை இவரை வழிபடும் வகையில் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. (ஒவ்வொரு சந்திர மாதமும், ஆறாவது நாள் இவ்விழா கொண்டாடப் படுவதாகக் கூறப்படுகிறது- The worship of Shashthi is prescribed to occur on the sixth day of each lunar month of the Hindu calendar as well as on the sixth day after a child's birth). மேலும், குழந்தையை இழந்த பெண்கள் ஷாஷ்டிக் கடவுளை ஒவ்வொரு மாதமும் வழிபடுவார்கள் என்றும் நம்பிக்கை.  ஷாஷ்டிக் கடவுள் பூமி கடவுளின் (பூமி மாதா) ஆறாவது அவதாரம் என்றும், அவரை கார்த்திகேயன் கடவுளின் மனைவி என்றும் கூறுவர். [1]
இப்போது ஒரு உண்மைச் சம்பவம்.
ஹரிகிருஷ்ணா, சிவ சக்தி இருவரும் (அண்ணா- தங்கை) அழகான இரட்டைக் குழந்தைகள்.  அவர்களின் அம்மா திருமதி மலர் (உண்மை பெயர்) தன் குடும்பத்தின் பொருளாதாரத்தின் நிர்பந்தத்தால்  ‘அம்மா உணவகம்’ ஒன்றில் வேலை பார்ப்பதுடன் மூன்று வீடுகளில் கூலி வேலை செய்தும் வருகிறார். அவருக்கு புவனேஷ்வர் என்று ஒரு மகனும் உண்டு.  கிட்டதட்ட பத்து வருடங்கள் முன்பு பொங்கல் திருநாள் ஒரு திங்கட்கிழமையன்று வந்தது. அன்று அன்னை மலர்,  தன்  குழந்தைகளுடன் வீட்டில் பொங்கல் பானை வைத்து கரும்பு, வித விதமான பழங்கள் என்று வைத்து சூரிய கடவுளை வணங்கி உண்ட களைப்பு  நீங்க  இளைப்பாறி கொண்டிருந்தனர். மலரின் மைத்துனர் தன் ஸ்கூட்டரில் அங்கு அவர்களைப் பார்த்துச் செல்ல வந்தார். வரும் வழியில், அவர் ஒரு ‘டாஸ்மாக்’ கடையைப் பார்த்து மயங்கி ஒரு கட்டிங்க் (Cutting) போட்டுவிட்டு ஒன்றும் கூறாமல் வந்துள்ளார் என்று மலருக்குத் தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து, அவருடன் ஸ்கூட்டரில் ஒரு சுற்று சென்று வர ஹரிகிருஷ்ணா விருப்பம் தெரிவிக்க, தன் மைத்துனர் கட்டிங்க் அடித்து வந்ததைப் பற்றி ஒன்றும் அறியாது, தன் மகன் அவருடன் ஸ்கூட்டரில் சென்று வர அனுமதித்தார்.  அவர்கள் வெளியே சென்ற ஒரு அரை மணி நேரத்தில் அடுத்த வீட்டு நண்பர் ஓடி வந்து ஹரிகிருஷ்ணா சென்ற ஸ்கூட்டர் விபத்துக்குள்ளாகி விட்டதாகவும், அவனின் உடல் நிலைமை கவலைக்கிடமாகவும் இருப்பதாகக் கூறிச் சென்றார். மலரும் அவர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தார். அவர் அங்கே கண்டது, ஹரிகிருஷ்ணாவின் உரு குலைந்து இறந்து கிடந்த காட்சியைத்தான்.  மறு நாள் (செவ்வாய் கிழமை) ஹரிகிருஷ்ணாவின் உடலை தகனம் செய்தனர். அன்றிலிருந்து அவர்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம்.  
தன் அன்பு மகனின் நினைவாக ஒவ்வொரு செவ்வாய் கிழமையன்றும், மலர் தன் இறந்த மகனின் ஆத்மாவை சாந்தி படுத்தும் என்ற நம்பிக்கையுடன் ஷஷ்டி கடவுளை வேண்டி, உணவு உட்கொள்ளாமல் நோன்பு கடைபிடித்து வருகிறார்.  
நம்மில் எத்தனையோ மனிதர்கள் ஒவ்வொரு மாதமும் அம்மாவாசையன்று முன்னோர்களை நினைவு கூறும் வகையில் தர்ப்பணம் செய்து வருகிறோம். இதுவன்றி, மஹாளய பட்சம் சமயத்திலும் (ஓவ்வொரு வருடமும் ஆவணி மாதம் பௌர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமை முதல் அமாவாசை முடிய பதினைந்து நாட்கள் முன்னோர்களை வணங்குதல்) தர்ப்பணம் செய்து வருகிறோம்.
இங்கே ஒரு தாய் தனக்குத் தெரிந்த வழியில் (வேத புத்தகங்களைப் படித்தோ, ஒரு வேத விற்பன்னரின் அறிவுறை இன்றியோ) இந்த செவ்வாய் கிழமை உண்ணா நோன்பை கடைப்பிடித்து வருகிறார். வேத புத்தகங்கள் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எழுதப் பட்டுள்ளாதாக வேத விற்பன்னர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த 21ஆம் நூற்றாண்டில் கடவுள் நம்பிக்கை பற்றி கடினமாக விமர்சனம் செய்து வரும் கால கட்டத்தில், இந்த மலர் என்ற தாய் தனக்குத் தெரிந்த வழியில் ஒரு புது வேத மந்திரமாக இறந்த குழந்தை நினைவாக ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் உணவு உண்ணா நோன்பை கடை பிடித்து வருகிறார். இவர் எழுதும் வேதம் புதிது. இவர் போன்ற மனிதர்களைப் பற்றி அறிவதில்தான் எத்தனை மன நிறைவு கிடைக்கிறது. இவர் போன்ற மனிதர்களைப் பார்ப்பதும் அரிதுதான்.  இவர்,  பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மலரும் ஒரு ‘குறிஞ்சி மலர்’ தான்.










[1] (Hindu Mythology, Vedic and Puranic); https://en.wikipedia.org/wiki/Shashthi; http://hindumythologybynarin.blogspot.in/2014/06/shasti-devi-story-of-goddess-deva-sena.html)

1 comment:

  1. உண்மை சம்பவம் குறித்து வருத்தமாக இருக்கிறது. கதை பரவாயில்லை

    ReplyDelete