Thursday 14 February 2019

கோல்டன் ஏஜ்



More than 30 years ago, I wrote this drama and sent for publication to then leading magazines like Vikatan, Kalki, Kumudham and also to DD. But, none touched it with their longest of long poles. The crumbled, pieces of the manuscript of the drama is still in my possession waiting to be read. I felt my Blog is the only way I can share it which I have presented now. Will try the English version of the drama too for those who do not know to read Tamil version.
Komacha (Santhanam)
14 February, 2019
******


பாத்திரங்கள்:
1.     கனகராஜ், அவன் மனைவி தங்கமணி
2.     பாஸ்கரன், அவன் மனைவி பொன்னம்மாள்
3.     பட்டம்மாள்- தங்கமணி, பொன்னம்மாள் இவர்களின் தோழி
4.     சுந்தரி- இவர்களின் மற்றொரு தோழி
5.     ராஸ்கல்-திருடன்

காட்சி-1

இடம்: கனகராஜ் வீடு

தங்கமணி அலங்காரத்தில் ஈடுபட்டுள்ளாள். ஒரு நீண்ட வால் போல் உள்ள பையில் தன் நகைகளை வைத்து அதை தன் இடுப்பை சுற்றி கட்டி கொள்கிறாள். அது, புடவை மடிப்பில் மறைந்து அதே கலரில் உள்ளது. பிறகு, அவள் வெளியில் செல்ல ஆயத்தமாக கிளம்பி வருகிறாள்.

கனகராஜ்: என்ன, எல்லா அலங்காரமும் ஆச்சா? வெளியே கிளம்பலாமா?
தங்கமணி: இடுப்பை ஒரு முறை தொட்டுப் பார்த்துக் கொண்டே,
‘ம், நான் ரெடி, போகலாம் வாங்க.’

காட்சி-2

இடம்: பாஸ்கரன் வீடு

பொன்னம்மாள் ஒரு பெட்டிகோட்-ஐ கையில் வைத்துக் கொண்டு அதில் உள்ள இன்ஸைட் பாக்கெட்டில் தன் நகைகளை போட்டுக் கொண்டிருந்தாள். அறைக்கு வெளியில் அவள் கணவன் பாஸ்கரன் குரல் கொடுக்கிறான்.

பாஸ்கரன்: என்ன. ட்ரெஸிங் ஆச்சா?

பொன்னம்மாள்:  இதோ வந்துட்டேங்க.

சிறிது நேரம் கழித்து அறையிலிருந்து அலங்கரித்துக் கொண்டு வருகிறாள், பொன்னம்மாள்.

பொன்னம்மாள்:  ம், வாங்க போகலாமா!’

காட்சி-3
இடம்: கடை வீதி

தங்கமணியும் அவள் கணவன் கனகராஜும் தெருவில் நடந்து வருகின்றனர். அவர்கள் டெல்லியிலிருந் து ஒரு மாத விடுமுறையில் சென்னை வந்துள்ளனர். நல்ல செல்வம் படைத்தவர்கள். தங்கமணி, மிகவும் சாதாரண படாடோபம் இல்லாத உடை உடுத்தியிருந்தாள். கழுத்திலும், கைகளிலும் யாதொரு நகையும் அணியாது ஸிம்பிள் ஆக தோன்றினாள்.

தொலைவில், அவளின் தோழி, பொன்னம்மாள், கணவர் பாஸ்கரனுடன் வந்து கொண்டிருக்கிறாள். அவள் வருவதைக் கண்டு தங்கமனி தன் கணவன் கனராஜுவிடம் கூறுகிறாள்.

தங்கமணி: ஏங்க, அதோ வருவது பொன்னமா இல்லே? கல்கத்தாவிலிருந்து அவளும் விடுமுறையில் வந்திருக்கா போலிருக்கிறது.

கனகராஜ்: ஆமாம், வருவது உன் ஃப்ரெண்டு பொன்னமாதான். அவளும் லீவில் வந்திருப்பாளோ?

இதற்குள் பொன்னம்மாளும் இவர்களை பார்த்து விட்டு அருகில் வருகிறாள்.

பொன்னம்மாள்: என்ன, தங்கமணி, சௌக்கியமா? எப்படி இருக்கு டெல்லி குளிரெல்லாம்?

தங்கமணி: சௌக்கியம்தான். டெல்லி குளிர் இப்போ தேவலை.

பொன்னம்மாள்: உங்கிட்டே ஏதோ மாறுதல் தெரியுதே!.... ஆங், நீ எப்போதும் நிறைய நகைகள் போட்டு கிட்டு வருவியே! ஏன் இப்ப இப்படி ரொம்ப மாடர்னா ஆயிட்டே.

தங்கமணி:  ம், ம்…..அது….. வந்து …ஒன்றுமில்லை.

பாஸ்கரன்: (மிகவும் தாழ்ந்த குரலில்---பொன்னம்மாவிற்கு மட்டும் கேட்கும் வண்ணம்) அவங்களுக்கு என்ன கஷ்டமோ? நீ பாட்டுக்கு ஏதாவது கேட்டு வருத்தப் படுத்தாதே.

கனகராஜ்: (மிகவும் தாழ்ந்த குரலில்---தங்கமணி காதில் மட்டும் கேட்கும் வண்ணம்) ஏன்? வெட்கமாக இருக்கா சொல்வதற்கு. சும்மா சொல்லு. பரவாயில்லை.

தங்கமணி: ம்.. அது, ஒன்றுமில்லை…….ஆமாம், நீ ஏன் ஒன்றும் இல்லாமல் கருக மணி மாலையோட வந்திருக்கே? போன தடவை வந்தப்போ கூட வீ.பி.வீ நகை கடையிலிருந்து எட்டு பவுனுக்கு ஒரு சங்கிலி வாங்கிட்டு போனியே?
கனகராஜ்: ஏன், தங்கம் வெட்கப்படறே? நானே சொல்றேன்…. வந்து இரண்டு மாதம் முன்பு ஒரு நாள், டெல்லியிலே உத்தர சாமி மலை கோவிலுக்கு போயிட்டு வரப்போ, வழியிலே இரண்டு திருட்டு பசங்க
எதிரே வந்து கத்தியைக் காட்டி மிரட்டினாங்க. இவ கழுத்து நகையெல்லாம் கழட்டி கொடுத்து உயிர் தப்பினால் போதுமென்று வீடு வந்து சேர்ந்தோம். இப்போதெல்லாம், டெல்லியில் திருட்டு அதிகமாகவே நடக்கிறது.
அதனால், அவள் பயந்து கிட்டு தன் நகையெல்லாம் ஊருக்கு போனால் எப்போதும் ஒரு நீண்ட துணிப் பையில் போட்டு தன் இடுப்பிலேயே சுத்திக்கிட்டு வருவா. அதை வீட்டில் வைப்பதேயில்லை. அந்த காலத்தில் குழந்தைக் கெல்லாம் இடுப்பில் அரணா கயிறு கட்டுவோம். இப்போ, நகை தொலைந்துவிடக் கூடாதேவென்று இடுப்பிலேயே கட்டிக்கிட்டு இருக்கா. ….. அவ்வளவுதான்.

பாஸ்கரன்: (பொன்னம்மாவைப் பார்த்து)
என்ன திருப்தி தானே உனக்கு இப்போ? நீ உன் கதையை சொல்ல வேண்டாமா?.....ம்….உனக்கும் வெட்கமா? அப்ப நானே சொல்கிறேன். உங்க டெல்லியாட்டம், கல்கத்தாவிலும் திருட்டுக்கும், கொலைக்கும் குறைவில்லை. அங்கேயும் பகலில் வீடு புகுந்து கொள்ளை அடிப்பது அதிகமாச்சு. அப்படித்தான், இவ ஒரு நாளைக்கு வெளியில் போயிட்டு வரப்போ, பின்னாடியே ஸ்கூட்டரில் ஒரு திருடன் இவ கழுத்தில் இருந்த சங்கலியை இழுத்து அறுத்துக் கொண்டு போயிட்டான். அவ தன் தாலியையும் சங்கிலியில் போட்டு இருந்ததனால், இரண்டும் சேர்ந்து பறி போயிற்று. இப்பெல்லாம், அங்கே, நிறைய    பேர் தாலி சங்கலி, பொன் தாலி எல்லாவற்றையும் கழட்டி பாங்க் லாக்கரில் வைத்து விட்டு, ஒரு மஞ்சளைத்தான் கயிற்றில் கட்டிப் போட்டுக் கொள்கிறார்கள்.  பவுன் இப்பத்தான் விலை அதிகமாகி  ரூபாய் 170/- க்கு விற்கிறது. ஊருக்கெல்லாம் சென்றால் தன் உள் பாவடையில் ஒரு சைடு பாக்கட்டை வைத்து தெய்த்துக்கிட்டு அதுலேயே வைச்சிருக்கா……அதனால், நகை இருப்பது ஒருவருக்கும் தெரியாதில்லையா? நகையும் திருட்டு போக வாய்ப்பில்லை.

கனகராஜ்: பாங்க் லாக்கரை விட பத்திரமான இடத்திலே
இருக்கிறதென்று கூறுகிறீர்கள், அப்படித்தானே?

பொன்னம்மாள்: (சிணுங்கிக் கொண்டே, பாஸ்கரனிடம்) என்னங்க இதெல்லாம் சொல்லிக்கிட்டு….

தங்கமணி: (கனகராஜிடம்) இதுவும் நல்ல ஐடியாதாங்க…….அப்ப நானும் இனிமே என் பெட்டிகோட்டில் சைடு பாக்கட் வைத்து தைத்து கொள்கிறேங்க.
கனகராஜ்: தைச்சுக்க, தைச்சுக்க……… தையற்காரர்கலெல்லாம் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கும் பிழைப்பு நடக்கணுமில்லயா?

அப்போது எதிரில், தங்கமணி, பொன்னம்மாள் இவர்களின் தோழி பட்டம்மாள் வருகிறாள். அவளும் நல்ல வசதியுள்ளவள். ஆனால், அவள் இவர்கள் இருவரைக் காட்டிலும் சாதாரண உடை உடுத்தியிருந்தாள். அவளுக்கு பட்டாடை உடுத்துவதில் ஒரு மோகம் உண்டு. ஆனால், இப்போது ஒரு காட்டன் புடவையைத்தான் உடுத்தியிருந்தாள்.

பொன்னம்மாள்: என்ன, பட்டு, சௌக்கியமா? எப்போ பாட்னாவிலிருந்து சென்னை வந்தாய்? பட்டு எப்போதும் தன் பெயருக்கு ஏற்ப பட்டு ஆடையைத்தானே உடுத்துவாய். இப்ப ஏன் இந்த பஞ்ச கோலம்?

பட்டம்மாள்: அந்த கதையை ஏண்டி கேட்கிறீங்க! ஒரு நாள் மாலை கடைத் தெருவிற்கு சென்று விட்டு வீடு திரும்பி வந்து கொண்டிருந்தேன். குளிர் காலமானதால் சற்று முன்பாகவே இருட்டி விட்டது. எங்க வீடு இருக்கும் தெருவில் மின்சாரம் வேறு இல்லை. அப்போ திடீரென்று ஒரு திருடன் கையிலே கத்தியுடன் எதிர்த்தாற் போல் வந்து நின்று கொண்டு நகையெல்லாம் கொடு என்று மிரட்டி பிடுங்கி விட்டான். பயந்து கொண்டே நானும் கழட்டி கொடுத்து விட்டேன். அந்த அயோக்கியன், அதோடு என்னை விட வில்லை. நான் கட்டியிருந்த பட்டு புடவை  வேறு அவனுக்கு அந்த இருட்டில் பள பளவென்று தோன்றியது.  அவன் அந்த பட்டுப் புடவையையும் கழட்டிக் கொடுத்தா தான் என்னை உயிருடன் விடுவேன் என்று மிரட்டினான். நானும் வேறு வழி அறியாது, புடவையையும் கழட்டி அவன் மூஞ்சியில் வீசி விட்டு பெட்டிகோட்டுடன் வீடு வந்து சேர்ந்தேன். அன்று முதல் இந்த எளிமை கோலம்தான்.

பாஸ்கரன்: ஆமாம், பவுன் நகை போதாதென்று, பட்டு புடவையையும் பணம் பெரும் சாமானென்று கேட்டு வாங்கிட்டானோ என்னவோ? பாட்னாவிற்கு டெல்லி மற்றும் கல்கத்தாவே தேவலை போலுள்ளது.

அப்போது அங்கே அவர்களின் மற்றொரு தோழி சுந்தரி தொலைவில் வருவது தெரிகிறது. சுந்தரி ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவள். வீட்டு மற்றும் பொருளாதார நிலமையினால், அவளும் வேலைக்குச் செல்கிறாள். எப்போதும் நகை ஏதும் அணியாது, கண்ணாடி வளையல்களும், ப்லாஸ்டிக் மணி மாலையும்தான் அணிந்து இருப்பாள். ஆனால், இப்போது கைகளிலும் , கழுத்திலும் நகைகள் பள பளக்கின்றன. அது கண்டு மூன்று வசதி படைத்த தோழிகளும் ஆச்சரியப் படுகின்றனர்.

பொன்னம்மாள்: பாருடி தங்கம்மா, நாம பயந்து பயந்து இடுப்பிலும், பெட்டிகோட்டிலும் நகைகளை வைத்துக் கொண்டு வரோம். இந்த சுந்தரி சாதாரணமா இருந்தா! இப்ப நகைகளை போட்டுகிட்டு மினுக்கிக் கிட்டு இருக்கா……..எங்கேயிருந்து இவளுக்கு இவ்வளவு பணம் வருது? சாதாரண வேலைதானே பார்க்கிறா. அதிலே சேமிச்சு இவ்வளவு நகை வாங்கிக்க முடியுமா,அதுவும், பவுன் இந்த விலை விக்கிறப்போ?

தங்கமணி: ஆமான்டீ………அற்பத்துக்கு பவிசு வந்தா அர்த்த ராத்திரிலே கூட குடை பிடிக்கும்னு சொல்லுவாங்க………..அதான், நாமெல்லாம் பிறந்ததிலிருந்து தங்க நகை போட்டு கிட்டிருந்தோம்….இப்போ பயந்துகிட்டு இருக்கோம். இவளுக்கு, இப்ப தான் தங்க நகைனாலே என்னனு தெரியும். அதான் தலை கால் புரியாம நகைகளைப் போட்டுகிட்டு வரா…….ம்….?

அதற்குள் சுந்தரி அவர்களை நெருங்குகிறாள்.

சுந்தரி: என்ன, நடு ரோட்டிலே எல்லாரும் சேர்ந்துகிட்டு, ரவுண்ட் டேபிள் கான்ஃபெரென்ஸ் நடத்திறீங்க? எல்லோரும் சௌக்கியமா இருக்கிறீங்களா? ஆனா, உங்கள பார்த்தா சௌக்கியமா இருக்கிறாப்பல தெரியலையே!

பட்டம்மாள்: ஆமாண்டி சுந்தரி, கொஞ்சம் அசௌகரியம்தான். நீ சௌக்கியமா இருக்கியா? இப்ப உனக்கு நல்ல வசதியெல்லாம் வந்திருச்சு போல இருக்கு. நகையும் நட்டும் போட்டுகிட்டு நல்லா ஜிம்முனு இருக்கியே. உனக்கு என்னம்மா, நீ ஒரு டீ. ஐ. ஜி(Double Income Group). உன்னோட வசதிக்கு என்ன குறைவு?

சுந்தரி: டீ. ஐ. ஜி ன்னா என்னடி?

பட்டம்மாள்: டபுள் இன்கம் க்ரூப்—அதான் நீயும் வேலைக்குப் போய் சம்பாதிக்கிறாய். உன் வீட்டுக் காரரும் சம்பாதிக்கிறார் இல்ல!

சுந்தரி: அது சரி, உனக்கென்னம்மா சொல்லிட்டே. நான் ஆபிஸ் போகலைனா வீட்டுல இரண்டு ஜீவனுக்கு சாப்பாடு கிடைக்காது.

தங்கமணி: (ஏளனமாக) ஆனா, உன்னைப் பார்த்தா அப்படித் தெரியலயே!

சுந்தரி: எதைப் பார்த்து அப்படி சொல்றே? ஓ ஹோ, இந்த நகைகளையெல்லாம் பார்த்துத்தானே! எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. ….பரவாயில்லை…..இதுல ஒரு பெரிய கதையே அடங்கியிருக்கு….
ஒரு நாள், நான் ஆபிஸ் விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தேன். மாச கடைசி வாரம். பர்ஸோ எம்ப்டி…..அதனாலே நடந்தே வந்தேன் வீட்டுக்கு……..அப்போ நல்லா இருட்டாகி விட்டது. குறுக்குப் பாதையில் வந்தா சீக்கிரம் வந்து விடலாமென்று ஒரு சேரிக்குள் நுழைந்து வந்து கொண்டிருந்தேன். அப்போ, ஒரு ராஸ்கல் கையில் எதையோ வைத்துக் கொண்டு நகைகளைக் கழட்டி கொடு என்று மிரட்டினான்… எனக்கு பயமாய் போயிடுச்சு. ..இருந்தாலும் ஒரு பக்கம் பயம்; ஒரு பக்கம் சிரிப்பு வந்தது. அதனால் மெதுவாக தைரியத்தை வர வழைச்சிக்கிட்டு “எங்கிட்ட ஒரு நகையும் இல்லை….தாலி கூட தங்கத்தில் போட்டுக்க முடியாத  பாவி நான்…”

ராஸ்கல் (திருடன்): அடச்சீ, சாவு கிராக்கி என்று திட்டிவிட்டு கையில் இருந்த கழியால் முதுகில் பல முறை அடித்து விட்டு சென்றான்.
வலி தாங்காமல், ஒரு வாரம் ஆபிஸிற்கு லீவு வேறு போடும்படியாகி விட்டது. சம்பளமும் போச்சு……..

இப்படி பயந்திருந்து வீட்டிலேயே இருந்தா கஞ்சி சாப்பாடு கூட கிடைக்காது….ஆகவே, போலி நகைகளை ஒரு 50 ரூபாய்க்கு வாங்கி போட்டு வெளியே செல்ல ஆரம்பித்தேன். ஆபிஸ் போகாம இருக்க முடியாத நிர்பந்தம் வராது பாரு……..

தோழிகள் ஒருவரை ஒருவர் பொருள் பொதிய பார்த்துக் கொண்டனர். பாஸ்கரனும்,  கனகராஜும் மெல்லியதாக சிரித்துக் கொண்டனர்.  தங்கமணி தன் இடுப்பைத்  தடவி பார்த்துக் கொள்கிறாள். பொன்னம்மாள் தொடையை சொரியும் பாவனையில் பெட்டி கோட்டை  தொட்டுப் பார்த்துக் கொள்கிறாள்.

ஊஹூம், இவர்களை ஒன்றும் மாற்ற முடியாது. பொன் நகை இருந்தும் அனுபவிக்க முடியாத ஒரு இனம். பொன் நகை இல்லாது போலி நகைகளுடன் செல்லும் சுந்தரி போன்ற மற்றொரு இனம். இவர்களெல்லாம் மாறப் போவதில்லை. இவர்கள் தற்கால “மைடாஸ்” கள்.



4 comments:

  1. ஒன்றும் சுவாரசியமாக இல்லை.
    மங்கா.

    ReplyDelete
  2. This story has a good moral, lacks enough flavour. Admire your other stories. Modern markandeyan evoked lot of sadness, ofcourse you have walked the path mentioned. More realistic and couldnt read it as a story. Felt sad and have to salute your optimism and the courage of manni and your daughters🙂🙂

    ReplyDelete
  3. priya. forgot to write my name.

    ReplyDelete
  4. it's reply delete, not sure how these technology works, just pressed publish. I am not techsavvy

    ReplyDelete